சீன-சவுதி மகாநாட்டுக்கு சீ சவுதி பயணம்

சீன-சவுதி மகாநாட்டுக்கு சீ சவுதி பயணம்

புதன்கிழமை முதல் 3 தினங்களுக்கு சவுதியில் இடம்பெறவுள்ள சீன-சவுதி மாநாட்டில் பங்கு கொள்ள சீன சனாதிபதி சவுதி அரேபியா செல்கிறார். இந்த சந்திப்பில் சுமார் $30 பில்லியன் பெறுமதியான வர்த்தக உடன்படிக்கைகள் கையொப்பமிடப்படும். சவுதி அரசரின் அழைப்பை ஏற்றே சீ அங்கு செல்கிறார்.

சவுதியின் ரியாத் நகரில் இடம்பெறவுள்ள China-Arab நாடுகள் மாநாடு மற்றும் China-GCC (Gulf Cooperation Council) மாநாடு இரண்டிலும் சீ பங்கு கொள்கிறார்.

சீனாவும், சவுதியும் தமக்கிடையே உறவை மேலும் வளர்க்க முனைகின்றன. சவுதி அமெரிக்கா உட்பட மேற்கில் தங்கியிருப்பதை தவிர்க்க முனைகிறது. அண்மையில் அமெரிக்க சனாதிபதி பைடென் சவுதி சென்றபோது பெரிய வரவேற்பு வழங்காத சவுதி சீக்கு பெரும் வரவேற்பு வழங்க உள்ளது. இது பைடெனுக்கு விசனத்தை ஏற்படுத்தும்.

சீனாவே தற்போது சவுதியின் மிக பெரிய வர்த்தக உறவு நாடு. சவுதியின் எண்ணெய்யை கொள்வனவு செய்யும் நாடுகளில் முதலாவது நாடும் சீனாவே. சீனாவும் தனது மொத்த எண்ணெய் கொள்வனவின் 18% பங்கை சவுதியில் இருந்தே கொள்வனவு செய்கிறது.

வரும் காலங்களில் எண்ணெய் பாவனை குறைந்து, அதனால் வரும் வருமானமும் குறையலாம் என்று கருதும் சவுதி வேறு துறைகளில் முதலீடுகளை செய்யவும் முனைகிறது. அந்த நோக்கிலேயே சவுதியில் மிக பெரிய விமான நிலையம் ஒன்று கட்ட உள்ளது.

சவுதி செங்கடல் பகுதியில் Neom என்ற மிக பெரிய அடுக்குமாடி நகரம் ஒன்றையும் கட்ட விரும்புகிறது. இந்த நகரம் 120 km நீளமும், 488 மீட்டர் உயரமும் கொண்ட இரண்டு சமாந்தர அடுக்கு மாடிகளை கொண்டிருக்கும். ஒரு நகருக்கு தேவையான அனைத்து வசதிகளும் அந்த இரண்டு மாடிகளில் இருக்கும். இதற்கு சுமார் $500 பில்லியன் முதல் $1,000 பில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது.