சீன செல்வந்தர்களை கண்வைத்து ஆஸ்திரேலியா விசா நடைமுறை

ஆஸ்திரேலியா அண்மையில் ஒரு பதிய விசா வகுப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த விசேட முதலீட்டாளர் விசா முறைமை சீனாவில் பெருகிவரும் செல்வந்தர்களையே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விசா வகுப்பு முறைமை குறைந்தது A$ 5 மில்லியன் முதலீட்டை ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்வோருக்கு 5 வருடம் வாழ விசா வழங்குகிறது. அந்த 5 வருடத்தின் பின் விரும்பின் அவர்கள் நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெறவும் உரிமை உண்டு.

இதுவரை சுமார் 170 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் அதிகமானோர் சீன பிரசைகள். இவர்களின் மொத்த முதலீடு சுமார் A$850 மில்லியன்.

இந்தவகை விசாவுக்கு ஆஸ்திரேலியா வழங்கியுள்ள விசா இலக்கம் மிகவும் நுணுக்கமானது. இந்த Business Innovation and Investmant விசாவை அவர்கள் subclass 888 என்கின்றனர். சீனருக்கு 8 என்றால் அதிக விருப்பம். சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி 2008 ஆம் ஆண்டு, 8 ஆம் மாதம் , 8 ஆம் திகதி, 8 மணி 8 நிமிடத்தில் ஆரம்பமாகி இருந்தது.

அமெரிக்காவும் இவ்வாறு விசா வழங்குகிறது. அங்கு $500,000 முதலீடு செய்யும் சிலரும் விசா பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் இவ்வாறு சுமார் 1700 வெளியார் விசா பெற்றுள்ளனர். அவர்களில் 80% சீனர்.