சீன பிறப்பு வீதத்தில் பெரும் வீழ்ச்சி

ChinaFlag

2018 ஆம் ஆண்டுக்கான சீனாவின் பிறப்பு வீதம் பெரும் வீழ்ச்சியை கொண்டிருக்கும் என்று சீனாவின் Global Times பத்திரிகை கூறுகிறது. ஆனால் ஒரு பிள்ளை மட்டும் என்ற கொள்கையை 2016 ஆம் ஆண்டில் நீக்கிய சீன அரசு, அதிகரித்த பிறப்பு வீதத்தை எதிர்பார்த்து இருந்தது.
.
2018 ஆம் ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் மொத்த தொகை இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், சில முக்கிய நகர மற்றும் மாகாண பிறப்பு தொகைகள் பிறப்பு வீதத்தில் பெரும் வீழ்ச்சி அடைய உள்ளதை காட்டியுள்ளன.
.
சீன அரசு 2018 ஆம் ஆண்டில் சுமார் 20 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் என்று கணித்திருந்தது. ஆனால் இத்தொகை 15 மில்லியனுக்கும் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
.
உதாரணமாக Shandong மாநிலத்து Liaocheng நகரில் 2018 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 64,753 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இத்தொகை 2017 ஆம் ஆண்டின் தொகையிலும் 26% ஆல் குறைந்தது. அதே மாகாணத்து Qingdao என்ற நகரின் பிறப்பும் 21% ஆல் குறைந்துள்ளது.
.
சீனாவில் 2015 ஆம் ஆண்டுக்கான பிறப்பு 16.55 மில்லியன் ஆக இருந்தது. ஒரு குழந்தை மட்டும் என்ற சட்டம் நீக்கப்பட்டதால் அங்கு 2016 ஆம் ஆண்டுக்கான பிறப்பு 17.86 மில்லியன் ஆக உயர்ந்திருந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் இத்தொகை 17.23 மில்லியன் ஆக குறைந்தது.
.