சீன Belt and Road திட்டத்துக்கு போட்டியாக G7 அணியின் B3W

சீன Belt and Road திட்டத்துக்கு போட்டியாக G7 அணியின் B3W

2013ம் ஆண்டு சீனா ஆரம்பித்த Belt and Road Initiative திட்டத்துக்கு போட்டியாக G7 நாடுகள் Build Back Better World (B3W) என்ற புதியதோர் திட்டத்தை இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளன. பிரித்தானியாவின் Cornwall நகரில் கூடும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய G7 நாடுகளே இந்த அறிவிப்பை செய்துள்ளன.

G7 அமைப்பில் சீனா ஒரு உறுப்பினர் நாடு இல்லை என்றாலும், சீனாவே G7 அமர்வின் பிரதான கருப்பொருளாக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் திட்டங்கள் சீனாவை கட்டுப்படுத்த G7 நாடுகளை இணைப்பதே.

கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அமெரிக்கவின் நோக்கங்களுக்கு ஆதரவு செய்ய முன்வந்தாலும், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் G7 ஒரு சீன எதிர்ப்பு அணியாக செயற்படுவதை விரும்பவில்லை.

B3W திட்டத்துக்கு எவ்வளவு முதலீடு செய்யப்படும் என்று அமெரிக்கா கூறாவிட்டாலும், சுமார் $100 பில்லியன் முதலீடு செய்யப்படும் என்று செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் International Development Finance Corporation, மற்றும் Export-Import Bank of the United States (Exim) ஆகியன B3W திட்டத்தில் பிரதான பங்கை கொண்டிருக்கும்.

1973ம் ஆண்டில் G7 ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த உலக பொருளாதாரம் இன்றில்லை. கனடா, இத்தாலி ஆகிய நாடுகள் முதல் 7 பெரிய வர்த்தக நாடுகள் பட்டியலில் இன்றில்லை. பதிலாக சீனா இரண்டாம் இடத்திலும், இந்தியா ஆறாம் இடத்திலும் உள்ளன. விரைவில் சீனா முதலாம் இடத்தை அடையும்.