சேர்பியாவுக்கு சீனா 6 விமானங்களில் ஏவுகணைகள்

சேர்பியாவுக்கு சீனா 6 விமானங்களில் ஏவுகணைகள்

ரஷ்யாவுக்கு ஆதரவாக ஐரோப்பியாவில் உள்ள நாடான சேர்பியாவுக்கு (Serbia) இன்று வியாழன் சீனா 6 பெரிய விமானங்களில் ஏவுகணைகள் அனுப்பி உள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளன அமெரிக்காவும் மேற்கு நாடுகளும்.

Y-20 என்ற சீன இராணுவ விமானங்களே சீனா தயாரித்த HQ-22 (Hong Qi 22) வகை ஏவுகணைகளை காவி சென்றுள்ளன. நிலத்தில் இருந்து வானத்துக்கான இந்த ஏவுகணைகள் அமெரிக்காவின் Patriot அல்லது ரஷ்யாவின் S-300 வகை ஏவுகணைகளுக்கு நிகரானவை.

யுகிரேனில் ரஷ்யா யுத்தம் செய்யும் வேளையில் சீனா சேர்பியாவுக்கு ஏவுகணைகளை வழங்கியது தவறு என்று மேற்கு கூறினாலும், இதற்கான ஒப்பந்தம் 2019ம் ஆண்டே நடைமுறை செய்யப்பட்டது என்கிறது சேர்பியா. 2020ம் ஆண்டில் அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தை கண்டித்து இருந்தது.

முன்னைய யூகோசிலவாக்கியா பகுதிகளில் மீண்டும் யுத்தம் உருவாக சேர்பியாவுக்கான இந்த ஆயுத குவிப்பு பயன்படலாம் என்று கவலை கொள்கின்றன மேற்கு நாடுகள்.

மேற்படி 6 விமானங்களும் தனித்தனியே இன்றி கூட்டாக பறந்ததுவும் மேற்குக்கு விசனத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் Y-20 மேற்கின் வான்பரப்புள் நுழைந்தது இதுவே முதல் தடவை.