சைக்கிளில் பிரசவத்துக்கு சென்ற நியூசிலாந்து பா. உ.

சைக்கிளில் பிரசவத்துக்கு சென்ற நியூசிலாந்து பா. உ.

Julie Anne Genter என்ற நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர், வயது 41, தனது இரண்டாம் பிரசவத்துக்கு வைத்தியசாலை நோக்கி சைக்கிளில் சென்றுள்ளார். இன்று ஞாயிறு அதிகாலை 2:00 மணிக்கு சைக்கிளில் தனது பயணத்தை ஆரம்பித்த இவர் 3:04 மணிக்கு தனது குழந்தையை பெற்று உள்ளார்.

Greens கட்சி உறுப்பினரான இவரின் செயல் சூழல் மீது அக்கறை கொண்ட இவரின் கட்சி கொள்கைக்கு சாதகமாக அமைந்து உள்ளது. நியூசிலாந்து அரசியல் உறுப்பினர்கள் பொதுவாக ஆடம்பரம் அற்றவர்கள். இவர்கள் தமது வாகனத்துக்கு முன்னேயும், பின்னேயும் பகட்டுக்கு வாகன அணியை கொண்டு இருப்பதில்லை. சுமார் 5 மில்லியன் மக்களை கொண்ட இந்த நாட்டின் பிரதமரும் ஆடம்பரம் அற்ற வாழ்க்கையை கொண்டவரே.

Genter தனது முதல் குழந்தையின் பிரசவத்துக்கும் சைக்கிளில் சென்று இருந்தார். இம்முறை சைக்கிளில் சென்ற நேரம் இவர் 42-கிழமை குழந்தையை வயிற்றில் கொண்டிருந்தார்.

Genter அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய இரண்டு நாடுகளில் குடியுரிமையையும் கொண்டவர். அமெரிக்காவின் Minnesota மாநிலத்தில் பிறந்த இவர் 2006ம் ஆண்டிலேயே நியூசிலாந்து சென்று இருந்தார். 2017ம் ஆண்டில் இவர் நியூசிலாந்தின் Minister of Women பதவியை கொண்டிருந்தவர்.