ஜப்பானில் பிறப்பு பாரிய வீழ்ச்சி, பிரதமர் Kishida எச்சரிக்கை

ஜப்பானில் பிறப்பு பாரிய வீழ்ச்சி, பிரதமர் Kishida எச்சரிக்கை

ஜப்பானில் அண்மை காலங்களில் நிலவும் பாரிய பிறப்பு வீழ்ச்சி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று ஜப்பான் பிரதமர் Fumio Kishida இன்று திங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த நாட்டில் பிறப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அவர் “now or never” என்று விபரித்துள்ளார்.

2021ம் ஆண்டில் ஜப்பானில் 800,000 க்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ளன. இந்நிலை 2029ம் ஆண்டு அளவிலேயே இடம்பெறும் என்று முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் அங்கு நிலைமை வேகமாக பாதிப்படைந்து வருகிறது. 1970ம் ஆண்டுகளில் அங்கு ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் குழந்தைகள் ஜப்பானில் பிறந்திருந்தன.

2017ம் ஆண்டில் 128 மில்லியன் பேரை கொண்டிருந்த ஜப்பானில் இந்த நூற்றாண்டின் இறுதியில் சுமார் 53 மில்லியன் பேர் மட்டுமே வாழ்வர் என்று கணிக்கப்படுகிறது.

தான் ஜப்பானில் பிறப்பை அதிகரிக்க புதிய சட்டங்களை வரும் ஜூன் மாதம் அளவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார் பிரதமர் Kishida.

குழந்தை வளர்ப்புக்கு அதிகம் செலவாகும் நாடுகளில் சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே 1ம், 2ம், 3ம் இடங்களில் உள்ளன என்கிறது YuWa ஆய்வு அமைப்பு.

மேற்கு நாடுகள் தமது பிறப்பு வீழ்ச்சியை குடிவரவு மூலம் மூடி மறைகின்றன. ஆனால் ஜப்பானில் குறைந்த அளவு குடிவரவே உள்ளது.