தண்ணீர் பஞ்சத்தில் கலிஃபோர்னியா, பாதாமுக்கு ஆபத்து

தண்ணீர் பஞ்சத்தில் கலிஃபோர்னியா, பாதாமுக்கு ஆபத்து

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை அண்டிய தென்கிழக்கு பகுதி நீண்ட காலமாக கடும் வறட்சிக்கு உள்ளாகி வருகிறது. அதனால் அரசு அங்கு நீர் பாவனையை கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை அப்பகுதிக்கு கணிசமான அளவில் நீர் வழங்கி வந்த Colorado River என்ற ஆற்றிலும் நீரோட்ட அளவு குறைந்து வருகிறது.

நீர் பற்றாக்குறையால் Hoover Dam அணைக்கு நீரை தேக்கும் Lake Mead வாவியின் நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதில் உள்ள நீரின் கனவளவு தற்போது 35% ஆக குறைந்து உள்ளது. 1930ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வாவியின் நீர் கனவளவு இவ்வாறு குறைவது இதுவே முதல் தடவை.

கலிஃபோர்னியா, அரிசோனா (Arizona), நெவாடா (Nevada) மாநிலங்களுக்கும், மெக்சிக்கோ பகுதிக்கும் உட்பட்ட 40 மில்லியன் மக்கள் இந்த வாவியின் நீரில் தங்கி உள்ளனர்.

அங்கு 600 ஏக்கரில் பாதாம் (almond) பயிரிட்ட விவசாயி ஒருவர் தற்போது 500 ஏக்கரில் மட்டுமே பாதாம் பயிர்ச்செய்கை செய்கிறார். நீர் பற்றாக்குறையே காரணம் என்றுள்ளார் அவர். உலக அளவில் 80% பாதம் பருப்பு இப்பகுதியில் இருந்தே வருகிறது. இதை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா பிரதானம்.

பாதாம் (almond) பயிர் மிக அதிக அளவு நீரை உள்ளெடுக்கும். ஒரு பாதாம் பருப்பு உற்பத்திக்கு சுமார் 4.2 லிட்டர் நீர் தேவைப்படும் (அதாவது ஒரு இறத்தல் பாதாம் உற்பத்திக்கு 7,192 லிட்டர் நீர் தேவைப்படும்). Walnuts பருப்பு, Pistachios பருப்பு ஆகியன சற்று குறைவான அளவு நீரை உள்ளெடுக்கும்.

1995ம் ஆண்டில் 168 மில்லியன் kg பாதாம் உற்பத்தி செய்த இப்பகுதி, 2020ம் ஆண்டில் 1,400 மில்லியன் kg பாதாமை உற்பத்தி செய்துள்ளது.