தமிழ்நாட்டில் தமிழ் மூலம் பல்கலைக்கழக வைத்திய கல்வி

தமிழ்நாட்டில் தமிழ் மூலம் பல்கலைக்கழக வைத்திய கல்வி

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ் மூலம் வைத்திய கல்வியை புகட்ட தமிழ்நாட்டு அரசு வழி செய்கிறது. இவ்வாறு தாய் மொழியில் உயர் கல்வியை கற்பதால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. இந்தியாவில் அது தீமையாக அமையும் சந்தர்ப்பம் அதிகம்.

முதலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசமே அந்த மாநிலத்து பிரதான மொழியான ஹிந்தியில் முதலாம் ஆண்டு வைத்திய கல்வியை வழங்க முன்வந்தது. இங்கு முதலாம் ஆண்டுக்கான anatomy, physiology, biochemistry ஆகிய மூன்று பாடங்களும் ஹிந்தி மொழியில் வழங்க வசதியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன.

மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்களை இந்திய Home அமைச்சர் அமித் ஷா வழங்கி ஆரம்பித்தார். மத்திய அமைச்சர் மாநில கல்வியில் தலையிடுவது ஏற்கனவே அரசியல் நோக்கத்தை காட்டியுள்ளது.

இதுவே தமிழ்நாட்டில் தமிழ் மூல வைத்திய கல்வியை ஆரம்பிக்க முன்னோடியானது. மாநில அரசுகளின் இந்த செயல்கள் வெறும் அரசியல் நாடகங்கள் ஆகினால் இந்த மாநிலங்களில் வைத்திய கல்வி பாதிப்பு அடையும். குறிப்பாக பல்கலைக்கழகங்கள் ஆளுக்கொரு மொழிபெயர்ப்பு செய்ய முடியாது, அதற்கான செலவு நியாயமாகாது. அரசுகளே மொழிபெயர்ப்பு செய்து புத்தகங்களை அச்சிட தலைப்படும். அதனால் கிடைக்கும் புத்தகங்களின் அளவு குறையும், மொழிபெயர்ப்பு காலத்தால் பின் தங்கும்.

சீனா போன்ற நாடுகளில் தாய் மொழியிலேயே பல்கலைக்கழக வைத்திய பாடங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் சீனாவில் 90% க்கும் அதிகமானோரின் தாய் மொழி சீனம். அங்கு 25 பல்கலைக்கழகங்கள் மட்டுமே ஆங்கிலத்தில் வைத்திய கல்வி வழங்க முடியும். அவையும் வெளிநாட்டு மாணவர்களை குறியாக கொண்டவை. இந்தியாவில் அவ்வாறு அல்ல, இந்தியாவில் மாநிலத்துக்கு ஒரு மொழி.

பல்கலைக்கழக வயதுவரை தாய் மொழியில் கற்ற ஒருவர் மேற்கொண்டு தாய் மொழியை கற்க பெரிதாக எதுவும் இல்லை. அவரின் தாய் மொழி அறிவு வைத்திய சேவையை சாதாரண மக்களுக்கு வழங்க போதுமானது.

அத்துடன் வெறுமனே மொழிபெயர்பை மட்டும் செய்வதால் எந்த மொழியும் வளர்ந்துவிடாது. அந்த மொழிக்குரிய மக்களின் அறிவு வளர்ந்தாலே மொழியும் வளரும். ஆங்கில வளர்ச்சிக்கு அதுவே பிரதான காரணம்.