தான் வளர்க்கும் மதவாதத்தால் பா.ஜ. இடரில்

தான் வளர்க்கும் மதவாதத்தால் பா.ஜ. இடரில்

இலங்கையில் புத்த மத வாதம் வாக்குகளை பெற பயன்படுத்துவது போல் இந்தியாவில் பா. ஜ. கட்சி இந்து மத வாதத்தை பயன்படுத்தி வருகிறது. மதவாதம் இலகுவில் வாக்குகளை வழங்குவதால் பா. ஜ கட்சி உறுப்பினர் பயமின்றி இஸ்லாம் விரோத கூற்றுகளை வெளியிட்டு வந்துள்ளனர். ஆனால் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பா. ஜ. உறுப்பினரின் கூற்றுகள் பா. ஜ. வை தற்போது இடரில் வைத்துள்ளன.

பா. ஜ. பேச்சாளரான Nupur Sharma என்பவர் கூறிய முஹமத்தை இழிவு செய்யும் கூற்று இஸ்லாமிய உலகம் எங்கும் எதிர்ப்பை தோற்றுவித்து உள்ளது. அதனால் Nupur கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லி பகுதிக்கு பொறுப்பான Naveen Jindal என்பவரும் இந்த விசயம் தொடர்பாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளார். மதவாதத்தால் பா. ஜ. நன்மை அடைந்தாலும் ஆபத்து வந்த வேளையில் இருவரை பலிக்கடா ஆக்கியுள்ளது.

குவைத், கட்டார், ஈரான், சவுதி ஆகிய இஸ்லாமிய நாடுகள் தமது நாடுகளில் உள்ள இந்திய தூதர்களை அழைத்து தமது விசனத்தை தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர் மீது பா.ஜ. போர் தொடுத்தாலும் இஸ்லாமிய நாடுகளை பகைக்க விரும்பவில்லை. 2021ம் ஆண்டில் இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் $87 பில்லியன் ஆக இருந்துள்ளது. பெருமளவு இந்தியர் மத்திய கிழக்கு சென்று உழைத்த பணத்தை இந்தியா அனுப்புகின்றனர்.

2018ம் ஆண்டு பிரதமர் மோதி அபுதாபியில் நடைபெற்ற இந்து ஆலயம் ஒன்றுக்கான அடிக்கல் நடும் நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.

கடந்த கிழமை அமெரிக்க வெளியுறவு செயலாளர் Antony Blinken இந்தியாவில் மத வன்முறைகள் அதிகரிப்பதாக கூறியிருந்தார்.