தி.மு.க. ஒரு குடும்ப வியாபாரம்?

இளவழகன்

ஒரு தனிநபர் சொத்துக்கான வாரிசை அதன் உரிமையாளர் தெரிவு செய்யலாம். ஆனால் ஒரு பொது சொத்துக்கான தலைமையை அந்த சொத்தை சார்ந்த எல்லாருமே கூடி தெரிவு செய்தல் அவசியம். ஆனால் பலருக்கும் உரிமையுள்ள ஒரு சொத்தான தி.மு.க. வை தனது சொந்த சொத்தாக கருதுகிறார் கருணாநிதி. அந்த சுய கருத்தின் அடிப்படையில் தி.மு.க. வுக்கான அடுத்த தலைமையாக தனது இளைய மகன் ஸ்டாலினை அடையாளம் கண்டுள்ளார் கருணாநிதி. இதற்கு ஆதரவை தெரிவித்துள்ளார் கருணாநிதியின் மகள் கனிமொழி. மறுபுறத்தில் கருணாநிதியின் மூத்த மகன் அமைச்சர் அழகிரி தன்னையே அடுத்த தலைவராக கருதிக்கொண்டு இருக்கிறார்.

உண்மையில் கருணாநிதி இங்கு இரு தவறுகளை செய்கிறார். முதலாவது தி.மு.க. வை தனது குடும்ப சொத்தாக கருதி, தனக்கு பின் தி.மு.க. வின் தலைமை தனது பிள்ளைகளில் ஒன்றின் கையில் இருத்தல் அவசியம் என கருதுவது. இரண்டாவது தான் தி.மு.கா. வின் தலைமையை கொண்டிருக்கையில் அதற்கான அடுத்த தலைமைக்கான தெரிவில் தலையிடுவது. இவ்வாறு நடப்பது பொதுவாகவே மூன்றாம் உலக நாடுகளின் பாவவினைகளில் ஒன்றுதான்.

1949 ஆம் ஆண்டு தொடங்கிய தி.மு.க. வை 1969 ஆம் ஆண்டில் இருந்து கருணாநிதியே தலைமை தாங்கி வருகிறார். இவ்வளவு காலத்தில் அவர் தமிழ் நாட்டு மக்களுக்கு செய்த நன்மைகளை விட அவரின் குடும்பத்துக்கு செய்த நன்மைகளே மிக அதிகம். இவரின் குடும்ப தொலைக்காட்சி சேவை நிறுவனமான கலைஞர் TV 2011 ஆம் ஆண்டு மாசி மாதம் 19 ஆம் திகதி மத்திய புலனாய்வு திணைக்களத்தால் (CBI) சோதனையிடப்பட்டது எல்லாவற்றுக்கும் மகுடம். இவ்விவகாரம் சம்பந்தமாக கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறையும் சென்றார்.

வளர்ந்த நாடுகளிலும் சில வேளைகளில் குடும்ப அங்கத்தவர்கள் அரசியல் வருவதுண்டு. ஆனால் அவர்கள் முறைப்படி போட்டியிட்டே பதவிக்கு வருவார்கள். பதவியில் உள்ள தலைவர் திறமையானவர்களை நசுக்கி தம் உறவுகளை வளர்ப்பதில்லை, அவ்வாறு வார்க்கவும் விடமாட்டார்கள் ஏனைய உறுப்பினர். மீறி அப்படி செய்தாலும் தேர்தலில் அவர்களுக்கு தோல்வி நிச்சயம். அதுமட்டுமன்றி தேர்தலில் தோல்வி பெற்ற தலைவர் பதவி விலக புதியதோர் தலைவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தேர்தலில் தோற்றாலும் தலைவர் பதவி விலகார். கருணாநிதிகூட பலதடவைகள் MGR, ஜெயலலிதா போன்றோரிடம் தோல்வி கண்டவரே.

கருணாநிதி உண்மையான தமிழ்நாட்டு மக்கள்மேல் அக்கறைகொண்ட தலைவர் என்றால் அவர் உடனடியாக செய்யவேண்டியது நேர்மையானதும், தராதரத்துடன் முன்வரும் எல்லா வேட்பாளர்களையும் உள்ளடக்கியதுமான ஒரு தெரிவுப்போட்டி வைத்து அதன் மூலம் அடுத்த தி.மு.க.வின் தலைவரை தெரிவு செய்யவதே. அப்படி செய்வதன் மூலம் ஒரு புனிதமான, மக்களின் நன்மை கருதிய அரசியல் கலாச்சாரம் தோன்ற வழிசெய்வதே.

திராவிட முன்னேற்ற கழகம் ஒரு குடும்ப சொத்தாக இருக்கும்வரை இந்திய திராவிடர்க்கு முன்னேற்றம் இல்லை. இதன் அர்த்தம் ஜெயலலிதா ஆட்சிகாலம் புனிதமானது என்றில்லை. ஐயாவின் கட்சியும் அம்மாவின் கட்சியும் ஒரு மட்டையில் ஊறியவைதான்.

இங்கு கவலைக்குரிய உண்மை என்னவென்றால் MGR, கருணாநிதி, ஜெயலலிதா காலங்களில் தமிழ்நாடு பெற்ற நலன்களைவிட வெள்ளையன் காலத்தில் பெற்ற நலன்கள் மிக அதிகம். கல்வி திட்டம், பெரும்தெருக்கள், துறைமுகங்கள், ரயில் சேவை என அநேகமானவை வெள்ளையன் காலத்து அபிவிருத்திகள். மறுபுறம் MGR, கருணாநிதி, ஜெயலிதா காலங்களில் சாதிக்கப்பட்டவை என்ன? ஒருவர் மக்கள் பணத்தில் கட்டிய கட்டடத்தை மற்றவர் கைவிடுவத்துதான். இது வீரானம் குழாய் திட்ட காலங்களில் இருந்து நடைபெறுகிறது.

இவர்களுக்கு இப்போது வடிவு வரும்போல் தெரியவில்லை. சீனாவின் வளர்ச்சிதான் இந்திய வாக்காளரை கண் விழிக்க வைக்கும்.