நிரந்தர காசா யுத்த நிறுத்தத்துக்கு ஐ. நா. வாக்களிப்பு

நிரந்தர காசா யுத்த நிறுத்தத்துக்கு ஐ. நா. வாக்களிப்பு

காசாவில் நிரந்தர யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்ய ஐ. நா. பாதுகாப்பு சபை வாக்களிப்பு மூலம் கூறியுள்ளது. மொத்தம் 15 பாதுகாப்பு சபை வாக்குகளில் 14 வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 0 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. சீனா ஆதரவாக வாக்களித்தது, ரஷ்யா வாக்களிக்கவில்லை.

இவ்வகை தீர்மானங்கள் பல முன்னர் ஐ. நா. பாதுகாப்பு சபைக்கு வந்திருந்தபோது அவற்றை அமெரிக்கா தனது வீட்டோ வாக்கு மூலம் தடுத்து இருந்தது. இம்முறை அமெரிக்காவே இவ்வகை தீர்மானத்தை வாக்களிப்புக்கு எடுத்து வந்துள்ளது.

இந்த தீர்மானம் யுத்த நிறுத்தத்தை 3 படிகளில் நடைமுறை செய்ய கேட்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் தெளிவு அற்றது என்று கூறுகிறது ரஷ்யா. அந்த குற்றச்சாட்டு ஓரளவு உண்மையே.

முதல் படி உடனடி, நிபந்தனை அற்ற யுத்த நிறுத்தத்துக்கு கேட்டுள்ளது. அத்துடன் இருதரப்பும் உடனடியாக கைதிகளை விடுதலை செய்யவும் கேட்டுள்ளது. ஆனால் எண்ணிக்கைகள் குறிப்பிடப்படவில்லை.

அத்துடன் இஸ்ரேல் படைகள் காசாவின் “populated area” வை விட்டு நீங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் “populated area” என்பது அவரவர் வரைவிலக்கணத்துக்கு உட்பட்டது.

இரண்டாம் படி நிரந்தர யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்யும். அத்துடன் மிகுதி யூத கைதிகளை விடுதலை செய்ய கேட்டுள்ளது. ஆனால் இம்முறை பலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று கூறப்படவில்லை.

மூன்றாம் படி நீண்டகால காசா புனரமைப்பு ஆரம்பிக்கும் என்று கூறுகிறது. ஆனால் எவ்வளவு பணம் வழங்கப்படும், அதை யார் அதை வழங்குவர் என்று கூறப்படவில்லை.

அதற்கும் மேலாக காசாவை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் தொடர்ந்தும் புனரமைப்பை கட்டுப்படுத்துமா என்பதையும் தீர்மானம் கூறவில்லை. மூன்றாம் படி ஒரு அர்த்தமற்ற படியாக அமையலாம்.

ஹமாஸின் எதிர்காலம் என்னவாகும் என்பதையும் இந்த தீர்மானம் கூறவில்லை.