நைஜீரியாவில் 21 மாடி கட்டிடம் உடைந்து வீழ்ந்தது

நைஜீரியாவில் 21 மாடி கட்டிடம் உடைந்து வீழ்ந்தது

நைஜீரியாவின் Lagos என்ற நகரில் 21 மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்று இன்று திங்கள் பிற்பகல் 2:45 மணிக்கு இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடம் இருந்த பகுதி பல ஆடம்பர மாடிகளை கொண்ட இடம். இதுவரை 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மேலும் பலர் இருப்பிடம் அறியப்படாது உள்ளனர்.

Apata என்ற இந்த கட்டிடம் கடந்த 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. இது இடிந்து விழுந்தபோது பல பணியாளர்கள் இதனுள் அகப்பட்டு உள்ளனர். கட்டிடம் உடைந்த நேரத்தில் சுமார் 50 பணியாளர் அங்கு இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படட சீமெந்து போன்ற பொருட்களில் தரம் குறைவாக இருந்ததால் Prowess Engineering Ltd என்ற நிறுவனம் பெப்ரவரி மாதம் கட்டுமான வேளைகளில் இருந்து வெளியேறி இருந்தது.

Lagos நகரத்தில் சுமார் 20 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஆபிரிக்காவில் இந்த நகரமே மிகக்கூடிய சனத்தொகை கொண்டது.

2019ம் ஆண்டிலும் இங்கு இரண்டு கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்திருந்தன.

2014ம் ஆண்டு இங்கு தேவாலய கட்டிடம் ஒன்று இடிந்ததால் சுமார் 100 பேர் பலியாகி இருந்தனர்.