பல்கேரியா பஸ் தீக்கு 46 பேர் பலி

பல்கேரியா பஸ் தீக்கு 46 பேர் பலி

பல்கேரியாவின் (Bulgaria) மேற்கு பகுதியில் உள்ள Sofia என்ற நகருக்கு தெற்கே இடம்பெற்ற பஸ் தீக்கு குறைந்தது 46 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் 12 சிறுவர்களும் அடங்குவர். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 2:00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

North Macedonia என்ற நாட்டில் இருந்து துருக்கிக்கு உல்லாச பயணம் சென்றவர்கள் நாடு திரும்புகையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றாலும், பஸ் பாதையோரம் இருந்த 50 மீட்டர் நீள தடுப்பை (crash barrier) உடைத்து சென்றமை காணப்படுகிறது. ஆனால் தீ இந்த மோதலுக்கு முன் ஆரம்பித்ததா அல்லது பின்னர் ஆரம்பித்ததா என்பதை போலீசார் இதுவரை அறியவில்லை.

விபத்துக்குள்ளான பஸ்சில் இருந்து 7 பேர் தப்பி உள்ளனர். அவர்கள் தீ காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர்.

விபத்துக்கு உள்ளான பஸ் Besa Trans என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிறுவனம் ஐரோப்பா அளவிலான உல்லாச பயணங்களை வழங்கி வருகிறது. விபத்துக்கு உள்ளான பஸ் Skopje என்ற நகரில் இருந்து உல்லாச பயணிகளை துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு எடுத்து சென்று இருந்தது. அவர்கள் மீண்டும் Skopje திரும்புகையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.