பிரித்தானிய மத்திய வங்கி வட்டி 5% ஆகிறது

பிரித்தானிய மத்திய வங்கி வட்டி 5% ஆகிறது

இன்று வியாழன் பிரித்தானிய மத்திய வங்கி (Bank of England) தனது வட்டியை 5% ஆக உயர்த்தி உள்ளது. அங்கு நிலவும் விலைவாசி வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு கடன் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அச்செயல் மாதாந்த வீட்டு கடன் கட்டுமானத்தை பாதிக்க, வீட்டு விலைகள் வீழ்ச்சி அடையும்.

2008ம் ஆண்டுக்கு பின் தற்போதே அங்கு வட்டி வீதம் இந்த அளவு உயர்வாக உள்ளது.

மே மாதம் பிரித்தானியாவில் விலைவாசி வீக்கம் (inflation) 8.7% ஆக இருந்துள்ளது. அதிகரித்த வட்டி மூலம் விலைவாசி வீக்கத்தை 2% ஆக குறைக்க அரசு முயல்கிறது.

மத்திய வங்கியின் வட்டி 5% ஆக உயர்ந்தால் வீட்டுக்கடன் கட்டுமான (mortgage) வட்டி 6% அல்லது அதற்கு அதிகமாகும். தமது வீட்டு கடனுக்கு நீண்ட காலம் 1% அல்லது 2% வட்டி கட்டிய வீட்டு உரிமையாளர் தீடீரென அதிகரித்த வட்டியை ஒவ்வொரு மாதமும் செலுத்த முடியாது போகலாம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் அங்கு 800,000 வீடுகளின் உரிமையாளர் தமது வீட்டு கடனை புதுப்பிக்க உள்ளனர். அப்போது அவர்களின் மாத கட்டுமானம் திடீரென அதிகரிக்கும். அத்துடன் அடுத்த ஆண்டு மேலும் 1.6 மில்லியன் வீடுகளின் கடன் புதுப்பிக்கப்படும். அவர்களும் அதிகரித்த வட்டியை செலுத்துவர்.

வட்டி தொடர்ந்தும் அதிகமாக இருந்தால் வீட்டு விலைகள் 20% முதல் 25% வரை வீழ்ச்சி அடையலாம் என்று கூறப்படுகிறது.