புதிய பிரித்தானிய பிரதமரை கலைக்க முன்னெடுப்பு

புதிய பிரித்தானிய பிரதமரை கலைக்க முன்னெடுப்பு

செப்டம்பர் 6ம் திகதி ஆட்சிக்கு வந்திருந்த பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான அரசை கலைத்து அங்கு பொது தேர்தல் மூலம் புதிய அரசு ஒன்றை அமைக்கும் முனைப்பில் சிலர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த வழிமுறைக்கு முதல் படியாக குறைந்தது 100,000 பேரின் கையெழுத்து பெறுவது அவசியம். குறைந்தது 100,000 கையெழுக்கள் கிடைத்தால் மட்டுமே இந்த விசயம் பாராளுமன்றில் விவாதிக்கப்படலாம். ஆனால் இந்த முயற்சி தற்போது 400,000 கையெழுக்களை பெற்று உள்ளது. அது மட்டுமன்றி இத்தொகை ஒவ்வொரு மணித்தியாலமும் 4,000 ஆல் அதிகரித்தும் செல்கிறது.

டிரஸ் அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்த வரவு செலவு திட்டத்தை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. செல்வந்தர்களுக்கு அதிக அளவில் வரி விலக்கு அளிப்பதை பலரும் வெறுத்து உள்ளனர். நாணய சந்தையும் இதை வெறுத்தால் பிரித்தானியா பொண்ட் ஒன்றின் பெறுமதி ஏறக்குறைய அமெரிக்க டாலரின் பெறுமதிக்கு நிகராக குறைந்து இருந்தது.

மேற்படி வரவு செலவு திட்டத்தின் பின் பிரித்தானிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தையும் அதிகரித்தும் இருந்தது. அதனால் அதுவரை வீடு போன்ற சொத்துக்களை கொள்வனவு செய்ய வல்லமை கொண்டு இருந்தோரில் 41% பேர் தமது கொள்வனவு வல்லமையை இழந்து உள்ளனர். வட்டி அதிகரித்ததால் இவர்களால் கடனையும் வட்டியையும் திருப்பி அடைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

அத்துடன் இவ்வாறு செல்வந்தரின் வருமான வரியை குறைக்க இருந்தமையை பிரதமரோ அல்லது நிதியமைச்சரோ ஏனைய அமைச்சர்களுக்கு முன்கூட்டியே கூறியிருக்கவில்லை. ஏனைய அமைச்சர்களுக்கு முன்கூட்டியே கூறாமை தவறு என்று டிரஸ் இன்று ஞாயிறு கூறியிருந்தார்.

ஆட்சியில் இருக்க போதிய ஆசனங்களை கொண்ட டிரஸ்ஸின் கட்சி உறுப்பினர் வாக்கு அளித்ததாலேயே அவர் பிரதமர் ஆகினார், பொது தேர்தல் மூலம் அல்ல.

2024ம் ஆண்டே அடுத்த தேர்தலுக்கான ஆண்டு என்றாலும், அதற்கு முன் அங்கு தேர்தல் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.