மதவாதத்தை புறக்கணித்த சில இந்திய வாக்காளர்

மதவாதத்தை புறக்கணித்த சில இந்திய வாக்காளர்

பெருமளவு இந்துவாதி இந்திய வாக்காளர் பிரதமர் மோதி தலைமையிலான பா. ஜ. கட்சிக்கு முன்னைய தேர்தல்களில் வாக்களித்து இருந்தாலும் சில இந்திய இந்து வாக்காளர் இம்முறை மதவாதத்தை புறக்கணித்து உள்ளனர். இவர்கள் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பு இன்மை போன்ற விசயங்களின் கவனம் செலுத்தி உள்ளனர். அதனால் பா. ஜ. முன்னைய தேர்தலில் வென்றிருந்த தொகுதிகளில் 63 ஐ இம்முறை இழந்துள்ளது.

இதுவரை குஜராத் மாநில தேர்தல்கள், இந்திய மத்திய தேர்தல்களில் மோதி பெரும்பான்மை ஆட்சிக்கு தேவையான ஆசனங்களை வென்றிருந்தாலும் இம்முறை அந்த ஆதரவை மோதி இழந்துள்ளார்.

மொத்தம் 543 ஆசனங்களை கொண்டுள்ள பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆட்சி அமைக்க குறைந்தது 272 ஆசனங்கள் தேவை. 2019ம் ஆண்டு 303 ஆசனங்களை வென்றிருந்த பா. ஜ. கட்சி இம்முறை சொந்தமாக வென்றது 240 ஆசனங்கள் மட்டுமே. அதனால் மோதியின் “Ab ki baar, 400 paar” என்ற கனவும் பலிக்கவில்லை.

பா. ஜ. கட்சியின் கோட்டையான உத்தர பிரதேசத்து அயோத்தியில் மசூதியை உடைத்து பெரும் ஆடம்பரமாக இராமர் கோவில் கட்டிய பா. ஜ. இந்த Faizabad தொகுதியில் 54,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்துக்கள் உட்பட பலரின் வீடுகள், கடைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தே இராமர் கோவில் கட்டப்பட்டது. ஆனால் சொத்துக்களை இழந்தவர்களுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வரனாசியில் 2014ம் ஆண்டு 371,784 மேலதிக வாக்குகளும், 2019ம் ஆண்டு 479,505 மேலதிக வாக்குகளும் பெற்று வென்றிருந்த பிரதமர் மோதி இம்முறை 152,513 மேலதிக வாக்குகள் மட்டுமே பெற்று வென்றுள்ளார்.

இந்திரா காந்தியின் குடும்பத்தின் நீண்ட கால ஆதிக்கம் கொண்ட அமேதி தொகுதியில் 2014ம் ஆண்டு Smriti Irani என்ற பா.ஜ. உறுப்பினரிடம் ராகுல் காந்தி தோல்வி அடைந்திருந்தார். இம்முறை காங்கிரசின் Kishori Lal என்பவர் Irani யை வென்றுள்ளார்.