மரண தொகையை மறைக்க இந்தியா அழுத்தம்

மரண தொகையை மறைக்க இந்தியா அழுத்தம்

இந்தியாவில் கரோனாவுக்கு பலியாகும் மக்களின் தொகையை குறைக்க, மறைக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் அழுத்தி வருவதாக சம்பவங்கள் காட்டுகின்றன. வழமையாக பாஜ ஆதரவு கொண்ட பத்திரிகைகளும் பொறுமையை இழந்து உண்மைகளை வெளியிட ஆரம்பித்து உள்ளன.

வழமையாக பாஜ ஆதரவு கொண்ட Dainik Bhaskar என்ற ஹிந்தி மொழி பத்திரிகை “அரச தரவுகள் பொய், தகனங்கள் உண்மையை கூறுகின்றன” என்று முன்பக்க செய்தி வெளியிட்டு உள்ளது.

ஏப்ரல் 15ம் திகதி Bhopal நகரில் 4 பேர் கரோனாவுக்கு பலியானதாக அப்பகுதி அரசு அறிவித்து இருந்தது. அத்தொகையையே பத்திரிகைகளும் வெளியிட்டன. ஆனால் அன்று அங்கு 3 தகன இடங்களில் மட்டும் மொத்தம் 112 உடல்கள் தகனம் செய்யப்பட்டு உள்ளன.

ஏப்ரல் 12ம் திகதி குஜராத் மாநிலத்து அகமதாபாத் நகரில் 20 பேர் கரோனாவுக்கு பலியானதாக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் அங்கு ஒரு வைத்தியசாலையில் மட்டும் 63 பேர் பலியாகி இருந்தனர்.

உத்தர பிரதேசத்தில் ஒரு தினம் மாநில அளவில் 68 பேர் கரோனாவுக்கு பலியானதாக UP அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அதே தினம் அம்மாநிலத்து Lucknow நகரில் மட்டும் 98 பேர் தகனம் செய்யப்பட்டு இருந்தனர்.

2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் முதல் மோதி அரசு பத்திரிகைகளை வன்மையாக கட்டுப்படுத்தி வருகிறது. பாஜ அரசுக்கு எதிராக செய்தி எழுதுவோரை நாட்டின் துரோகிகள் தாக்கி வருகின்றனர். இறுதி World Press Freedom சுட்டியில் இந்தியா 142ம் இடத்தில் உள்ளது. இராணுவ ஆட்சியில் உள்ள பர்மா இரண்டு படி மேலே, 140ம் இடத்தில் உள்ளது.

அத்துடன் இந்திய அரசு சுமார் $270,000 பணத்தை அரச விளம்பரங்களில் தினமும் செலவிடுகிறது. அரசுடன் பகைத்து விளம்பர வருமானங்களை இழக்கவும் பத்திரிகைகள் பின்னடிக்கின்றன.

உத்தர பிரதேசத்தில் Shashank Yadav என்பவர், தனது தந்தையின் பயன்பாட்டுக்கு, Tweeter மூலம் oxygen cylinder தேவை என்று செய்தி அனுப்பிய பின் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பை Wire செய்தி நிறுவனம் அறிந்து பகிரங்கம் செய்தது. Yadav தனது செய்தியில் கரோனா என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. ஆனாலும் பீதியை கிளப்புவதாக குற்றம் கூறி கைது செய்யப்பட்டு உள்ளார். அன்றைய இரவு அவரின் தந்தை மரணமாகி இருந்தார்.