மருத்துவ நிறுவனங்கள் Pfizer, Allergan $160 பில்லியன் இணைவு

Pfizer

அமெரிக்காவை தளமாக கொண்ட Pfizer என்ற மருந்துகள் தயாரிப்பு நிறுவனமும், அயர்லாந்தை (Ireland) தளமாக கொண்ட Allergan என்ற மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமும் இணைவதாக இன்று திங்கள் அறிவித்துள்ளன. இரண்டும் இணைந்த புதிய நிறுவனம் $160 பில்லியன் ($160,000,000,000) பெறுமதியானதாக இருக்கும். இணைவால் தோன்றும் புதிய நிறுவனத்தின் பெரும்பாலான வர்த்தகம் அமெரிக்காவில் நடைபெற்றாலும் அதன் தலைமையகம் அயர்லாந்திலேயே இருக்கும். இவ்வாறு இந்த நிறுவனங்கள் இணைவதன் உள்நோக்கமே அமெரிக்காவின் வரிகளில் இருந்து தப்புவதே.
.
அமெரிக்காவின் பல பெரிய நிறுவனக்கள் இவ்வாறு வரி குறைந்த வேறு நாடுகளுக்கு தமது தலைமையகங்களை நகர்த்துவதன் மூலம் அமெரிக்காவின் உயர் வரியில் இருந்து விடுபடுகின்றன. இதை அந்நிறுவனங்கள் சட்டப்படியே செய்கின்றன. இவ்வாறு செய்தல் அமெரிக்க அரசின் வரி வருமானத்தை பாரிய அளவில் குறைக்கின்றது.
.
அமெரிக்காவில் நிறுவன வரி சுமார் 35% ஆகும், அதேவேளை அயர்லாந்து (12.5%) போன்ற இடங்களில் நிறுவன வரிகள் மிக குறைவு. அதனாலேயே பல நிறுவனங்கள் இவ்வாறு தலைமையகங்களை அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு நகர்த்துகின்றன. இவ்வாறு வரி நகர்த்தலை tax inversion என்பர்.
.
இணைவின் பின் இந்த நிறுவனமே உலகின் மிகப்பெரிய மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கும். இந்த இணைவை அரசுகளும், பங்காளரும்  அங்கீகாரம் செய்தல் வேண்டும். இதன் பங்கு (Stock) நியூ யோர்க் பங்கு சந்தையில் (New York Stock Exchange) பரிமாறும்.

.