மீண்டும் ஜெர்மனி சென்ற தாய்லாந்து அரசர், 30 நாய்களுடன்

மீண்டும் ஜெர்மனி சென்ற தாய்லாந்து அரசர், 30 நாய்களுடன்

தாய்லாந்தின் அரசர் King Maha Vajiralongkorn, வயது 69, மீண்டும் இரகசியமாக ஜெர்மனி சென்று இனிய வாழ்வை தொடர ஆரம்பித்து உள்ளார் என்கிறது ஜெர்மனியின் Bild என்ற பத்திரிகை. இவர் தன்னுடன் 30 poodle வகை வளர்ப்பு நாய்களையும் எடுத்து சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

இவருடன் 250 உதவியாளரும் இந்த கிழமையின் ஆரம்பத்தில் ஜெர்மனி சென்று உள்ளனர் என்று கருதப்படுகிறது. தாய்லாந்தில் இருந்து ஜெர்மனி செல்வோர் தம்மை குறைந்தது 5 தினங்கள் தனிமைப்படுத்துவது அவசியம் என்ற காரணத்தால் இவர்கள் ஜெர்மனி விமான நிலையத்து Hilton விடுதியின் 4ம் மாடியை முற்றாக வாடகைக்கு எடுத்து உள்ளனர்.

அரசரையும், அவரின் கூட்டத்தையும் படம் பிடித்த Bild பத்திரிகையாளரிடம் படத்தை அழிக்கும்படி கூறி அரசரின் பாதுகாவலர் மிரட்டியதாகவும், பத்திரிகையாளர் உடனே ஜெர்மன் போலீசுக்கு அழைப்பு விடுத்தது படத்துடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. அந்த படம் Bild பத்திரிகையில் வெளிவந்து உள்ளது.

2007ம் ஆண்டு அரசர் ஜெர்மனியின் Bavaria மாநிலத்தில் உள்ள Lake Starnberg அருகே குடியிருப்பு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பெருமளவு காலங்களில் இவர் இங்கேயே தங்கி வருகிறார். தேவைகளுக்கு மட்டுமே அவர் தாய்லாந்து செல்வர்.

ஜெர்மன் சட்டப்படி ஒருவர் அங்கு குடியிருந்துகொண்டு இன்னோர் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அந்த விதியை தாய்லாந்து அரசர் மீறுகிறாரா என்று பத்திரிகைகள் பலமுறை ஜெர்மன் அரசை கேட்டு உள்ளன. ஆனாலும் ஜெர்மன் அரசு விசாரணைகள் எதையும் இதுவரை செய்திருக்கவில்லை. அரசர் ஜெர்மனிக்கு எடுத்துவரும் செல்வம் ஜெர்மனியின் பாராமுகத்துக்கு ஒரு காரணம் ஆகலாம்.

தாய்லாந்தில் அரசரை இராணுவம் பாதுகாக்க, இராணுவத்தை அரசர் பாதுகாத்து இருதரப்பும் சுகங்களை அனுபவிக்கின்றனர்.