மோதலை நோக்கி சீனாவும் வியட்னாமும்

ParacelIs

அண்மைக்காலமாக சீனா தனது ஆதிக்கத்தை தென்சீன கடலில் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த கடலடியில் இருக்கும் எரிபொருள் போன்ற இயற்கைவளங்களே. இந்த மாதம் முதலாம் திகதி China National Offshore Oil Corporation (CNOOC) சுமார் $1.0 பில்லியன் பெறுமதியான எண்ணை அகழ்வு தளம் ஒன்றை வியட்னாம் தனது கடல் என கருதும் கடலில் அமைத்தது. இவ்விடம் வியட்னாம் கரையில் இருந்து சுமார் 140 மைல் தூரத்தில் உள்ளது. இவ்விடயம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் போர் மூண்டுள்ளது.

1950 களில் இருந்து Paracel தீவுகளை சீனா தனது என கூறி வந்துள்ளது. 1974 இல் அப்போதைய தென் வியட்னாம் ஆட்சியாளர் இந்த தீவுப்பகுதிகளில் இருந்த மீன்பிடி வள்ளங்களை மிரட்ட, உதவிக்கு வந்த சீனாவின் கடல்படை இங்கு நிரந்தரமாக குடிகொண்டது. இவ்விடத்தில் 1988 இல் நடந்த ஒரு மோதலில் 70 வியட்னாம் படையினர் பலியாகியிருந்தனர்.

கடந்த 7 ஆம் திகதி இவ்விடம் வந்த வியட்னாம் காவல் படையின் கப்பல் ஒன்றை சீனாவின் கப்பல் ஒன்று விசமத்தனமாக மோதியதாக வியட்னாம் கூறியிருந்தது. இன்னுமொரு இவ்வகை மோதல் இம்மாதம் 14 ஆம் திகதியும் இடம்பெற்றதாக வியட்னாம் கூறியது. இதை தொடர்ந்து வியட்நாமில் சீன எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகி உள்ளன. பல வெளிநாட்டு தொழில்சாலைகள் தீமூட்டப்பட்டுள்ளன.

2013 இல் சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் $50 பில்லியன். 2015 இல் இது $60 பில்லியன் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா சில சீன எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டு இருந்தாலும், நேரடியாக தலையிடவில்லை.