மோதி அரசு, Twitter மோதல், கரோனா காரணம்

மோதி அரசு, Twitter மோதல், கரோனா காரணம்

கரோனா தொடர்பான மக்களின் பதிவுகள் காரணமாக மோதி அரசுக்கும், அமெரிக்காவின் Twitter நிறுவனத்துக்கும் இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளது. Twitter மீதான மோதி அரசின் அழுத்தத்தை இன்று வியாழன் Twitter ‘மிரட்டும் அணுகுமுறை’ (intimidation tactics) என்று கூறியுள்ளது.

மோதி அரசு கரோனா பரவலின் இரண்டாம் அலையை தடுக்க உரியன செய்யவில்லை என்றும், போதிய வைத்திய வசதிகளை செய்யவில்லை என்றும் மக்கள் Twitter மூலம் கருத்து தெரிவிப்பதை மோதி அரசு விரும்பவில்லை. மோதி அரசு அண்மையில் இவ்வகை பதிவுகளை Twitter இணையத்தில் இருந்து நீக்கும்படி எச்சரிக்கை கடிதம் ஒன்றை Twitter அலுவலகத்துக்கு அனுப்பி இருந்தது.

அரசுக்கு எதிரான கருத்துக்கள் Twitter இணையத்தில் இருந்து நீக்கப்படாவிடின், அதன் அதிகாரிகள் மீது வழக்குகள் தொடரப்படும் என்றும், குற்றவாளிகள் 7 ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடும் என்றும் அந்த கடிதம் எச்சரித்து உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமும் மோதி அரசு Facebook, Instagram, Twitter ஆகிய இணையங்களிடம் தமது அரசுக்கு எதிரான பதிவுகளை அழிக்கும்படி கூறி இருந்தது. Facebook நிறுவனத்தின் அங்கமான WhatsApp ஏற்கனவே இந்திய அரசின் அழுத்தங்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடுத்து உள்ளது.

மேற்படி நிறுவனங்கள் முதலில் மோதி அரசுக்கு சார்பாக செயற்பட்டாலும், தொடர்ந்தும் அரசின் கட்டளைகளை ஏற்க மறுக்கின்றன.