யாருக்கு சொல்லியழ 13: ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்

யாருக்கு சொல்லியழ 13: ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்

(இளவழகன், 2021-12-06)

அண்மையில் இலங்கை சிங்களவர் ஒருவர் பாகிஸ்தானில் தாக்கி, எரியூட்டப்பட்டு இருந்ததை சில பாகிஸ்தான் இஸ்லாமியர் உட்பட பலரும் கண்டித்து இருந்தனர். பாகிஸ்தானின் தலைமை இராணுவ அதிகாரியும் இதை “cold-blooded murder”என்று அழைத்திருந்தார்.

இவ்வகை செயற்பாடுகள் பாகிஸ்தானில் மட்டும் நிகழ்பவை அல்ல. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை எங்கும் இவ்வகை செயற்பாடுகள் நிகழ்ந்துள்ளன. ஆபிரிக்க நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. 1983ம் ஆண்டு இனகலவர காலத்தில் புறக்கோட்டை பகுதியில் தமிழ் குடும்பம் ஒன்று அவர்களின் கார் ஒன்றுள் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டத்தை தன் கண்ணால் கண்ட சிங்களவர் ஒருவர் பின்னர் அதை விபரமாக எழுதி இருந்தார். சிங்களவர் ஒருவராலேயே மற்றைய சிங்களவர் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் இங்கே நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் யாழ்ப்பாணத்தில் புலிகள் இவ்வாறு மாற்று இயக்க உறுப்பினர்களை வீதிகளில் எரித்ததை மறந்து புலிப்புகழ் பாடும் யாழ்ப்பாண தமிழர் சிலரும் பாகிஸ்தானை மனித குணம் அற்றவர்கள் என்று காரசாரமாக வசை பாடுவதுதான். புலிகள் இதர இயக்கங்களை, அதாவது தமிழரின் சகோதரங்களை, எரித்ததற்கு பொங்கி எழாத இந்த தமிழர் இப்போது மட்டும் பொங்கி எழுவதன் காரணம் என்ன?

சிங்களவரை எரித்த பாகிஸ்தானியருக்கு பாகிஸ்தானியர் சிலரின் ஆதரவு உண்டு. தமிழரை எரித்த சிங்களவருக்கு சிங்களவர் சிலரின் ஆதரவு உண்டு. மாடு வெட்டினார்கள் என்று கூறி இஸ்லாமியரை எரித்த இந்துவாதிகளுக்கு இந்தியர் சிலரின் ஆதரவு உண்டு. இதர இயக்க சகோதரங்களை எரித்த புலிகளுக்கு தமிழர் சிலரின் ஆதரவு உண்டு. மதத்தால், இனத்தால், இயக்கத்தால் வேறுபட்டாலும் இவர்கள் அனைவரும் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகளே.

இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ.