கனடிய தமிழ் வாக்குகளை சில்லறை விலையில் பெற்று கனடிய அரசியல் கட்சிகளுக்கு மொத்த விலையில் விற்கும் கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய பிரதமர் மே மாதம் 18ம் திகதியை கனடாவில் “Tamil Genocide Remembrance Day” என்று அறிவித்து உள்ளார்.
இது கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் மற்றுமொரு சில்லறை சாதனை மட்டுமே. இவ்வகை கனடிய சில்லறை நாடகங்களால் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கபோவது இல்லை. கனடா இப்போது கூறும் massacre ஐ தடுக்கப்படவேண்டிய காலத்தில் தடுக்கவில்லை.
2009ம் ஆண்டு Toronto நகரில் உள்ள Gardiner Expressway யையே மந்தைகள் போல் சில தமிழர்கள் மறித்த நேரத்தில் இந்த கனடிய அரசியல் பயனுள்ள எதையும் முள்ளிவாய்க்காலில் செய்திருக்கவில்லை. படுகொலையை தடுக்கப்படவேண்டிய காலத்தில் தடுக்காமல், தடுப்பதற்கு உதவாமல், 13 ஆண்டுகளின் பின் ஒப்பாரி வைக்கிறது கனடிய அரசியல்.
ஆனால் யுக்கிரனை ரஷ்யா தாக்க, கனடா 13 ஆண்டுகள் காத்திருந்து “Ukraine Genocide Remembrance Day” அறிவித்து முதலை கண்ணீர் விடவில்லை. மாறாக உடனுக்குடன் களமுனைக்கு ஆயுதங்களை அனுப்புகிறது கனடா. அண்மையில் கனடா நான்கு M777 howitzer வகை எறிகணை ஏவிகள், Carl Gustaf வகை ஆயுதங்கள், M72 Light Anti-tank Weapons, 7,500 grenades உட்பட பல ஆயுதங்களை யுகிரேனுக்கு இலவசமாக அனுப்பி உள்ளது.
யுக்கிரேன் மரண எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் முள்ளிவாய்க்கால் மரண எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.
கனடா யுகிரேனுக்கு வழங்குவது இறைச்சி, கனடிய தமிழருக்கு வழங்குவது வெறும் எலும்பு துண்டுகள் மட்டுமே. ஆனாலும் கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்கள் கனடிய வெற்று சொற்களை பெற்று தந்ததாக தற்பெருமை கொள்கிறார்கள்.
மறுபுறம் Ontario மாகாணத்தில் முன்னர் அறிவிக்கப்பட்ட “Tamil Genocide Education Week” தற்போது நீதிமன்றத்தில் இழுபடுகிறது.
இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?
(இளவழகன், May 19, 2022)