யாருக்கு சொல்லியழ 18: வெள்ளையன் பிள்ளை, not anymore 

யாருக்கு சொல்லியழ 18: வெள்ளையன் பிள்ளை, not anymore 

யாழ்ப்பாணத்தில் உன்னதமானவர்களை வெள்ளையன் பிள்ளை மாதிரி என்று பெருமையிட்டு அழைப்பது உண்டு. அக்காலத்தில் வெள்ளையர்கள் உன்னதமான, நேர்மையான, பொய் புரளி இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால் தற்கால நிலைமை அவ்வாறு அல்ல. குறிப்பாக அரசியலில் வெள்ளையர்களும் பொய், புரளி, உருட்டு, பிரட்டு நிரம்பி உள்ளனர். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா எல்லாம் இதே நிலையே.

ரஷ்யாவின் பூட்டின் யூகிரைன் தனது கோதுமை போன்ற தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாது துறைமுகங்களை தடுப்பது “real war crime” என்று ஐரோப்பிய வெளியுறவு கொள்கை அதிகாரி Josep Borrell இன்று கூறியுள்ளார்.

ஆனால் ஐரோப்பா, அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் தமது பொருளாதார, அரசியல் ஆளுமைகளை திணிக்கும் நோக்கில் மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்கும் பொருளாதார தடைகள் மக்களை பசி கொடுமையில் வதைக்கும் பொழுது அவை war crime ஆக இவர்களுக்கு இருப்பதில்லை. ஈரான் இஸ்ரேலுக்கு அடிபணியவில்லை என்பதால் ஈரானிய மக்கள் மீது முழு பொருளாதார தடைகள் விதிக்கும் இவர்கள் தற்போது அழுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போலவே உள்ளது.

அதற்கும் மேலாக ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல்களையும் இந்த ஐரோப்பியர் war crime என்று இன்றுவரை கூறியதில்லை. சதாம் மீது பொய் குற்றச்சாட்டை திணித்து மகன் புஷ் ஈராக்கை அழித்தது இவர்களுக்கு war crime அல்ல. NATO நாடுகளை தாக்காத லிபியாவை NATO தாக்கி அந்த நாட்டை ஒரு வாழ முடியாத நாடாக்கியது இவர்களுக்கு war crime அல்ல. பாலஸ்தீனர் மீது ஆக்கிரமித்த இஸ்ரேல் அரை நூற்றாண்டு காலமாக பொருளாதார தடைகள் விதித்து வதைப்பது இவர்களுக்கு war crime அல்ல.

யூகிரையின் விசயத்தில் Josep Borrell இன்னோர் உண்மையையும் திட்டமிட்டு மறைத்து உள்ளார். கருங்கடலில் உள்ள ரஷ்ய படைகள் யூகிரைன் தரைகளை அடையக்கூடாது என்ற நோக்கில் யூகிரேனும் தனது கண்ணிவெடிகளை கரையெங்கும் புதைத்து உள்ளது. ரஷ்யா தனது கடல் கண்ணிவெடிகளை ஆழ்கடலில் புதைத்து உள்ளது. ஆகவே தடை இரு பகுதிகளாலும் நடைமுறை செய்யப்பட்டுள்ளது.

இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?

(இளவழகன், June 20, 2022)