யாருக்கு சொல்லியழ 19: முட்டுக்காய் தமிழர்

யாருக்கு சொல்லியழ 19: முட்டுக்காய் தமிழர்

வேற்று மொழி சொல் ஒன்றுக்கு தமிழில் ஏற்கனவே மாற்று சொல் ஒன்று இல்லை என்றால் அதற்கு புதியதொரு தமிழ் சொல்லை கொள்ள விரும்புவது நலம், அவசியம். ஆனால் அவ்வாறு தமிழில் ஒரு புதிய சொல்லை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சி தமிழை, தமிழின் மகிமையை அழிக்கும் என்றால் தமிழுக்கான மாற்று சொல்லை அமையாது நேரடியாக வேற்று மொழி சொல்லையே பயன்படுத்துவது தமிழுக்கு செய்யும் பெரும் தொண்டாகும். அவ்வாறு செய்வது இன்றைய முட்டுக்காய் தமிழன் அழகிய பண்டை தமிழை அழிப்பதை, அவமானம் செய்வதை தவிர்க்கும்.

Facebook என்ற சொல்லை முகப்புத்தகம் என்கிறான் இந்த முட்டுக்காய் தமிழன். அரைகுறை ஆங்கில அறிவும், அரைகுறை தமிழ் அறிவும் கொண்ட இவனுக்கு face என்பது முகம் என்றும் book என்பது புத்தகம் என்றும் தெரியும். ஆனால் Twitter என்ற சொல்லில் குழம்பியுள்ளான் அந்த தமிழன். Facebook என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். அதற்கு ஏன் மொழிபெயர்ப்பு? John, Peter போன்ற நபர்களின் பெயர்களை, லண்டன், பாரிஸ் என்ற இடங்களின் பெயர்களை நாம் மொழிபெயர்ப்பு செய்கிறோமோ? Liverpool என்ற இடத்தை ‘கல்லீரல் குளம்’ என்று அழைக்கிறோமா?

நீண்ட காலம் ஆங்கிலத்தின் அடிமைகளாக இருந்த தற்கால தமிழர் உருவாக்கும் புதிய தமிழ் சொற்கள் பல பண்டை தமிழின் மகத்துவத்துவத்தை  இழிவு செய்கின்றன. தமிழ் ஒரு மொழி மட்டுமன்றி, வாழ்க்கை முறையாக, விஞ்ஞானமாக, மருத்துவமாக பல துறைகளில் பின்னிப்பிணைந்து இருந்துள்ளது. இவற்றை அறியாத இன்றைய முட்டுக்காய் தமிழர் பலர் ஆதி தமிழரின் அறிவை அழிக்க, அவமதிக்க உடைந்தையாகுகிறார்கள்.

உதாரணமாக ஆங்கிலத்தின் ‘teen’ என்ற சொல்லுக்கு முட்டுக்காய் தமிழர் ‘பதின்ம’ என்ற சொல்லை திணிக்கிறார்கள். இந்த ‘பதின்ம’ என்ற சொல்லை தமிழன் பயன்படுத்துவது தமிழ் படுகொலைக்கு ஒப்பாகும்.

ஆங்கிலத்தில் teen என்ற சொல் 13 (thirteen), 14 (fourteen), 15 (fifteen), 16 (sixteen), 17 (seventeen), 18 (eighteen), மற்றும் 19 (nineteen) ஆகிய எண்களுக்கு மட்டுமே தகும். அதேவேளை 11, 12 ஆகிய எண்களுக்கு தகாது. ஆங்கிலத்தில் eleven, twelve ஆகிய சொற்கள் மட்டுமே உள்ளன, eleventeen, twelveteen என்ற சொற்கள் இல்லை.

ஆனால் தமிழில் ‘பதின்ம’ என்ற சொல்லை பயன்படுத்தும் தமிழர் 11, 12 ஆகிய இரண்டு எண்களும் ‘பதின்ம’ என்ற சொல்லில் அடங்கும் அல்லது அடங்காது என்று திடமாக கூற முடியுமா? முடியவே முடியாது! இந்த முட்டுக்காய் தமிழர் இங்கு ஒரு பிரதான உண்மையை அறியவில்லை.

ஆங்கிலம் நீண்ட காலமாக அடி-12 (base-12) எண்ணல் முறையை பயன்படுத்தி வந்துள்ளது. அதனாலேயே நாம் இன்றும் 12 அல்லது அதன் மடங்குகளை குறிக்கும் சொற்கள், கணியங்கள் ஆங்கிலத்தில் இருப்பதை காண்கிறோம். ஒரு அடியில் 12 அங்குலங்கள் உள்ளன. ஒரு dozen என்ற சொல் 12 பொருட்களை குறிக்கும். பழைய ஆங்கில Tory இறாத்தலில் 12 Tory அவுன்ஸ் உண்டு.

கலப்படம் மிகையான ஆங்கிலமும் அடி-12 முறையை வேறு எங்கோ இருந்தே அறிந்திருக்கும். அத்துடன் ஆங்கில வழமையில் teen என்ற சொல் ஒருவர் தனது பருவ வயதை அடைவதையும் குறித்து இருக்கும்.

அது மட்டுமன்றி 9 முதல் 12 வரையான teenage வயதுக்கு முன்னான வயதுகளை ஆங்கிலத்தில் pre-teen என்றும் குறிப்பர். அதனால் 11, 12 ஆகிய வயதுகள் pre-teen என்ற சொல் உள் அடங்கும்.

ஆனால் தமிழ் மொழி அடி-10 எண்ணல் முறையை (base-10) ஆதிகாலம் முதல் பயன்படுத்தி வந்துள்ளது. ஒன்பது (தொண்பது?), தொண்ணூறு, தொள்ளாயிரம் ஆகிய சொற்கள் தொண்டு அல்லது கடைசியான என்ற கருத்தை கொண்டன என்கிறார் க. நீலாம்பிகை. அதாவது இவை அடி-பத்தில் கடைசி எண்கள். தமிழில் வயோதிபரை தொண்டுக்கிழவன் என்பதுவும் அதே கருத்தை கொண்டதே. திருக்குறளும் பத்தின் மடங்குகளாகவே கூறு போடப்பட்டு உள்ளது. அதாவது தற்கால decimal அல்லது base-10 எண் முறைமை ஆதி தமிழில் ஊறி இருந்தமை புரிகிறது.

தமிழில் உள்ள மகிமை மிக்க அடி-பத்து  எண்ணல் முறையை தற்போது கைவிடப்பட்டு உள்ள அடி-12 எண்ணல் முறைக்குள் அழிக்க முனைகிறான் இன்றைய முட்டுக்காய் தமிழன்.

பதின்ம என்ற தமிழ் சொல் teen என்ற ஆங்கில சொல்லை குறித்தால் 11, 12 ஆகியன பதின்ம ஆகாது. அப்படி அவை பதின்ம அல்ல என்றால் அவை எதின்ம?

பதின்ம என்ற தமிழ் சொல் 11, 12 ஆகிய எண்களை உள்ளடக்கினால் eleventeen, twelveteen ஆகிய ஆங்கில சொற்கள் எங்கே?

Teen என்பது பதின்ம என்றால் pre-teen என்ற ஆங்கில சொல்லுக்கு ஒத்த சொல் ‘முன்பதின்ம’ என்று ஆகுமா? அப்படியானால் 11, 12 ஆகிய இலக்கங்கள் எல்லாம் எவ்வாறு முன்-பத்து ஆகும்?

இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?

(இளவழகன், September 4, 2022)