யுக்கிறேனுக்கான மேற்கின் ஆதரவு ஆட்டம் காண்கிறது

யுக்கிறேனுக்கான மேற்கின் ஆதரவு ஆட்டம் காண்கிறது

யுக்கிறேனை ரஷ்யாவுடன் மோத முன்னின்று ஆதரித்த மேற்கின் ஆதரவு மெல்ல ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்நிலை மேலும் உக்கிரம் ஆகினால் யுக்கிறேன் யுத்தத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்படலாம்.

இதுவரை அமெரிக்காவே யுக்கிறேனுக்கு முதலாவது பெரிய அளவில் உதவிகளை செய்து வந்தது. ஆயுதம், பணம், இராணுவ பயிற்சி, உளவு ஆகிய பல முனைகளில் அமெரிக்கா உதவியது. ஆனால் ஞாயிறு இரவு முதல் அந்த உதவி கேள்விக்குறி ஆகியுள்ளது.

சில அமெரிக்க அரசியல்வாதிகள், குறிப்பாக Republican கட்சியை சார்ந்த அரசியல்வாதிகள் யுக்கிறேனுக்கான உதவியை நிறுத்த கேட்டுள்ளனர். அந்த சண்டை தமது சண்டை அல்ல என்பதே இவர்களின் கருத்து. ரம்பை போல் இவர்களும் NATO வை வெறுப்பவர்கள்.

ஞாயிறு வரை நிறைவேற்ற முடியாது இருந்த தற்காலிக அமெரிக்க வரவு-செலவு திட்டம் யுக்கிறேனுக்கான உதவிகளை நீக்கிய பின்னரே இறுதி நிமிடங்களில் நிறைவேறியது. முழு அளவிலான வரவு-செலவு திட்டம் நவம்பர் மாதம் வாக்கெடுப்புக்கு வரும்.

இதுவரை அமெரிக்கா சுமார் $110 பில்லியன் பெறுமதியான உதவிகளை யுக்கிறேனுக்கு செய்தியிருந்தது. ஆனால் மேலும் $6 பில்லியன் வழங்குவதே நேற்று நிறுத்தப்பட்டுள்ளது.

சனாதிபதி பைடென் தான் மேலும் $24 பில்லியன் வழங்க உள்ளதாக கூறினாலும், அவருடன் அமெரிக்க காங்கிரஸ் ஒத்துக்கொள்ள மறுக்கலாம். யுத்தம் மேலும் சில ஆண்டுகள் நீடித்தால் மேலும் பல நூறு பில்லியன் யுக்கிறேனுக்கு தேவைப்படும்.

அதேவேளை செலவாக்கியா (Slovakia) என்ற ஐரோப்பிய நாட்டில் தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவு வழங்கும் Robert Fico என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவரும் யுக்கிறேனுக்கு எதிரான ஒருவர்.

மேற்கு ஒரு நாள் யுக்கிறேன் யுத்தத்தில் வெறுப்பு கொள்ளும் என்பதே பூட்டினின் எதிர்பார்ப்பு.

2024ம் ஆண்டில் ரம்ப் மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்படல் அதுவும் யுக்கிறேனுக்கு பாதகமாக அமையும்.