ரம்பின் Mar-a-Lago மாளிகை FBI சோதனையில்

ரம்பின் Mar-a-Lago மாளிகை FBI சோதனையில்

அமெரிக்காவின் மத்திய குற்ற புலனாய்வு (FBI) அதிகாரிகள் இன்று முன்னாள் சனாதிபதி ரம்பின் Mar-a-Lago என்ற சொந்த குடியிருப்பு மாளிகையை சோதனை செய்துள்ளனர். FBI அதிகாரிகளின் செயலால் கடுமையாக விசனம் கொண்டுள்ளார் ரம்ப்.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பின் ரம்ப் பிளோரிடா மாநிலத்தில் உள்ள இந்த மாளிகையிலேயே குடியிருக்கிறார். ஆனாலும் தேடுதல் வேளையில் ரம்ப் நியூ யார்க் நகரில் இருந்ததாக சில பத்திரிகைகள் கூறுகின்றன.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய ரம்ப் அமெரிக்க அரசுக்கு சொந்தமான பல இரகசிய (classified) ஆவணங்களை சட்டத்துக்கு விரோதமான முறையில் தன்னுடன் எடுத்து சென்றுள்ளார் என்பது இவர் மீதான ஒரு குற்றச்சாட்டாகும். அத்துடன் 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவும் இவர் மீது குற்ற சாட்டுகள் உள்ளன.

தனது மாளிகைக்கு வந்த FBI தனது பாதுகாப்பு பெட்டகத்தையும் உடைத்து உள்ளனர் (they even broke into my safe) என்று கூறி ஆவேசம் கொண்டுள்ளார் ரம்ப்.

FBI முன்னறிவித்தல் இன்றிய சோதனையை Mar-a-Lago மாளிகையில் செய்ததாக ரம்பின் சட்டத்தரணி கூறியுள்ளார். அத்துடன் FBI அதிகாரிகள் பல ஆவணங்கள் எடுத்து சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரம்ப் மீண்டும் 2024 சனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.