ரஷ்யா-கிரைமியா பாலத்தை பார வாகன குண்டு தகர்த்தது

ரஷ்யா-கிரைமியா பாலத்தை பார வாகன குண்டு தகர்த்தது

2014ம் ஆண்டு ரஷ்யா யுகிரைனிடம் இருந்து பறித்து பின் ரஷ்யாவுடன் இணைத்த கிரைமியா (Crimea) என்ற குடாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பிரதான பாலத்தை பாரிய குண்டு ஒன்றை காவி சென்ற பார வாகனம் வெடித்து தகர்த்துள்ளது. இது ரஷ்யாவுக்கு ஒரு அவமானமும், தற்காலிக பின்னடைவும் கொண்ட தாக்குதலாகும்.

யுகிரைனில் இடம்பெறும் இராணுவ நடவடிககைகளுக்கு தேவையான இராணுவம், இராணுவ வாகனங்கள், வெடி மருந்துகள், உணவுகள் எல்லாம் இந்த வழியாலேயே அதிகம் எடுத்து செல்லப்பட்டன. அவ்வகை பாலம் ஒன்றை ரஷ்யா பாதுகாக்க அக்கறை கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது.

பல இடங்களில் எதிரியின் பலத்தை ரஷ்யா குறைத்து மதிப்பிட்டு பலமாக அடிபட்டு வந்துள்ளது. இன்றைய பால தகர்ப்பும் அதில் ஒன்று. உடைந்த பால திருத்த வேலைகள் உடனே ஆரம்பிக்கப்பட்டாலும் ரஷ்யாவின் தரமற்ற இராணுவ திட்டங்கள் புலனாகின்றன.

பால வீதியில் சென்ற பார வாகன குண்டு வெடித்த வேளையில் அருகே தண்டவாளத்தில் எரிபொருளை ஏற்றி சென்ற ரயில் பெட்டிகளும் கூடவே தீ பற்றிக்கொண்டன. சுமார் 10 மணித்தியாலங்களின் பின் ரயிலும், சிறிதாவது வாகனங்களும் மீண்டு அந்த பாலம் வழியே பயணிக்க ஆரம்பித்து உள்ளன.

வெடித்த பார வாகனத்துக்கு அருகில் சென்ற கார் ஒன்றில் இருந்த 3 பேரும் கூடவே பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

2018ம் ஆண்டே பூட்டின் இந்த பாலம் மூலமான சேவையை ஆரம்பித்திருந்தார்.