வட்டி செலவில் மாளும் அமெரிக்கா

வட்டி செலவில் மாளும் அமெரிக்கா

அமெரிக்காவின் கடன்களுக்கான வட்டி செலவு வேகமாக அதிகரித்து வருகிறது. வட்டி செலவு தற்போது அமெரிக்க மத்திய அரசின் மூன்றாவது பெரிய செலவாக மாறி உள்ளது. உலகின் மிகப்பெரிய இராணுவத்துக்கு செலவிடப்படும் பாதுகாப்பு செலவு நாலாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த 2024ம் கணக்கியல் ஆண்டின் (fiscal year) முதல் 7 மாதத்தில் அமெரிக்கா $514 பில்லியனை தனது கடனுக்கான வட்டியாக செலுத்தி உள்ளது. அதே காலத்தின் பாதுகாப்புக்கு அமெரிக்கா செலவழித்து சுமார் $497 பில்லியன் மட்டுமே.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வட்டி செலவு அமெரிக்காவின் 7ஆவது செலவாக மட்டுமே இருந்தது. திடீரென அதிகரித்து வரும் வட்டி வீதம் பொதுமக்களை மட்டுமன்றி அமெரிக்க மத்திய அரசையும் அதிர வைக்கிறது.

2024ம் ஆண்டு அமெரிக்கா அரச கடன்களுக்கு செலுத்தும் வட்டி பணம் 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41% ஆல் அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவிடம் தற்போது $34.6 டிரில்லியன் ($34,600 பில்லியன்) கடன் உள்ளது. இக்கடன் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை அடைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் தற்போது இல்லை.

1990 களில் சராசரியாக அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு $138 பில்லியன் மட்டுமே வரவு செலவில் பற்றாக்குறையாக (deficit) இருந்தது. 2000 களில் அது $318 பில்லியன் ஆக அதிகரித்து, 2010 களில் $829 பில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. 2024ம் ஆண்டி இது $1.5 டிரில்லியன் ஆகலாம்.

தற்போது அமெரிக்காவின் பெரிய செலவுகள்:

1. Social Security: $837.3 பில்லியன்
2. Health: $518.1 பில்லியன் 
3. Net Interest: $514.2 பில்லியன் 
4. National Defense: $497.7 பில்லியன் 
5. Medicare: $464.9 பில்லியன் 

அமெரிக்காவின் இரண்டு கட்சிகளும் ஒருவர் மற்றவரை கடனுக்கு குற்றம் சாட்டினாலும் இரண்டு கட்சிகளும் அளவற்ற கடனுக்கு காரணமாக உள்ளன.

முன்னாள் Republican சனாதிபதி ரம்பின் 4 ஆண்டு கால ஆட்சியில் அமெரிக்காவின் கடன் $7.8 ட்ரில்லியனால் அதிகரித்து உள்ளது. Democratic கட்சி பைடெனின் முதல் 3 ஆண்டுகளில் கடன் $6.8 ட்ரில்லியனால் அதிகரித்து உள்ளது.