பிரித்தானியாவின் RAF Fairford விமானப்படை தளத்தில் நிலை கொண்டிருந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அனைத்து B1 Lancer நீண்ட தூர குண்டு வீச்சு விமானங்களும் ஞாயிறு அமெரிக்காவுக்கு நகர்த்தப்பட்டு உள்ளன.
அண்மை காலங்களில் இந்த விமான தளத்தை தாக்கும் நோக்கம் கொண்டவர்கள் என்று கருதப்படும் சிலர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே மேற்படி விமானங்கள் அமெரிக்காவுக்கு பின் வாங்கப்பட்டு உள்ளன. ஆனாலும் அமெரிக்கா நகர்வுக்கான காரணம் எதையும் கூறவில்லை.
செப்டம்பர் 27ம் திகதி இந்த விமான தளம் அருகே நடமாடிய 23 முதல் 25 வயது வரையான 5 நபர்கள் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். பின் 6வது ஈரானிய-பிரித்தானிய குடியுரிமை கொண்ட 25 வயது நபரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விமான தளத்தில் இருந்து பறந்து சென்ற B1 விமானங்களே ஈரான் மீது கடந்த காலங்களில் குண்டுகளை வீசி இருந்தன.
B1 குண்டு வீச்சு விமானங்கள் 34,000 kg எடை கொண்ட குண்டுகளை 7,600 km தூரம் பறந்து வீச வல்லன. அமெரிக்காவிடம் மட்டுமே உள்ள இந்த வகை விமானங்களில் 45 மட்டுமே தற்போது சேவையில் உள்ளன.
