அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக இணக்கம் அறிவிப்பு

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக இணக்கம் அறிவிப்பு

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக இணக்கம் ஒன்றை ஞாயிறு அறிவித்து உள்ளன. இந்த இணக்கப்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் அனைத்து பொருட்களுக்கு அமெரிக்கா 15% இறக்குமதி வரி அறவிடும்.

இந்த 15% இறக்குமதி வரி முன்னர் ரம்ப் அறிவித்திருந்த 30% வரியின் அரை பங்கே. அத்துடன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் செல்லும் பொருட்களுக்கு பல்வேறு அளவிலான வரி அறவிடப்படும். இந்த விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

ரம்ப் ஏற்கனவே பிரித்தானியா, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுடனும் இவ்வகை இணக்கங்களை அறிவித்து இருந்தாலும், அவற்றின் விபரங்களும் அறிவிக்கப்படவில்லை.

2024ம் ஆண்டு அமெரிக்கா $606 பில்லியன் பெறுமதியான பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருந்தது. அதேநேரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் $370 பில்லியன் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருந்தன.