அமெரிக்க நுகர்வோர் சந்தையை முந்தவுள்ளது சீனா

உலகத்திலேயே மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக உள்ள அமெரிக்க நுகர்வோர் சந்தையை (consumer goods market) சீனாவின் நுகர்வோர் சந்தை விரைவில் பின்தள்ளும் என்று 2019 ஆம் ஆண்டுக்கான தரவுகள் கூறுகின்றன.

2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நுகர்வோர் சந்தை $6.2 டிரில்லியன் ($6,200 பில்லியன்) ஆக இருந்துள்ளது. அதே ஆண்டு சீனாவின் நுகர்வோர் சந்தை $6.0 டிரில்லியன் ஆக இருந்துள்ளது. வேகமாக வளரும் சீனாவின் நுகர்வோர் சந்தை தற்போது நிலவும் $200 பில்லியன் இடைவெளியை நிரப்பி, தொடர்ந்தும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்த பெரும் தொகையானோர் வேகமாக வளர்ந்து வரும் மத்திய மற்றும் செல்வந்த வகுப்புக்களை அடைவதால் அவர்கள் பெருமளவு அத்தியாவசிய பொருட்களை மட்டுமன்றி ஆடம்பர பொருட்களையும் கொள்வனவு செய்கின்றனர். இதே வேகத்தில் சீனா வளர்ந்தால் சுமார் 400 மில்லியன் மக்களை கொண்ட அமெரிக்காவின் நுகர்வோர் சந்தையிலும் மிகையாக வளர்வது 1.4 பில்லியன் மக்களை கொண்ட சீனாவுக்கு கடினம் அல்ல.

இதுவரை காலமும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மட்டுமன்றி, எதிரி நாடுகளும் தமது பொருட்களை அங்கு விற்பனை செய்ய உரிமை பெறும் நோக்கில் அமெரிக்காவுக்கு பணிந்து செயல்பட்டன. தற்போது சீனாவும் அந்த பயனை அடைய ஆரம்பித்துள்ளது. வளர்ந்துவரும் சீன நுகர்வோருக்கு தமது பொருட்களை விற்க விரும்பும் நாடுகள் சீனாவுக்கு பணிந்து செயல்பட முனையும்.