Facebook இணையம் பொய்யர்கள், மூடர்களின் சுவர்க்கம். இதில் தெளிவு இன்றி, ஆதாரம் இன்றி எதையும் எவரும் எழுதலாம். சிலவேளைகளில் அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கலாம். பலாலி விமான நிலையமும் தற்போது இவ்வகை facebook மூட பதிவுகளில் அகப்பட்டு உள்ளது. இந்த பதிவுகளுக்கு “அப்பிடி கேளடா தம்பி” என்று like குகளும் குவிகின்றன.
அண்மையில் அமெரிக்காவின் பெரிய இராணுவ விமானமான C-130 Hercules இறங்கி உதவி பொருட்களை வழங்கிய பின் சில தமிழ் facebook போராளிகளுக்கு இலங்கை மற்றும் இந்திய அரசுகளை சாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த பெரிய அமெரிக்க விமானம் பலாலியில் இறங்க முடியும் என்றால் ஏன் ஐரோப்பா, கனடா போன்ற இடங்களில் இருந்து செல்லும் பெரிய விமானங்கள் நேரடியாக பலாலிக்கு செல்ல முடியாது என்ற கேள்வியே இந்த facebook போராளிகளின் புதிய வெடிகுண்டு. தாம் அரசுகளின் கபடத்தை பகிரங்கம் செய்துள்ளதாகவும் இவர்கள் பெருமை கொள்கிறார்கள்.
இலங்கை, இந்திய, மற்றும் இந்த facebook போராளிகளின் அரசியலுக்கு அப்பால் மேற்படி விமானங்களின் தொழில்நுட்பங்களை ஒரு முறை அறிவோம்.
ஒரு இராணுவ விமானத்தை ஒரு பயணிகள் விமானத்துடன் ஒப்பிட முடியாது. இராணுவ விமானங்கள் (உண்மையில் அனைத்து இராணுவ வாகனங்களும்) போர் காலத்தில் பயன்படுத்த பெரும் செலவில், உயர் நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுபவை. பயணிகள் விமானங்கள் அப்படி அல்ல.
மேற்படி C-130 விமானம் இறங்கி ஏற அதில் உள்ள பாரத்துக்கு ஏற்ப 0.9 km முதல் 1.1 km தூர ஓடுபாதை போதும். இதில் உள்ள Turboprop Engines, Reverse Thrust, Rugged Landing Gear போன்ற பல நுட்பங்கள் அவ்வாறு சிறிய ஓடுபாதையில் இறங்கி ஏற உதவி செய்கின்றன. யுத்த காலத்தில் இது ஓரளவு கடினமான தரவை நிலங்களிலும் இறங்கி ஏற வல்லது.
மேற்படி வசதிகள் பயணிகள் விமானங்களில் இல்லை. இருந்தால் அவை பயணிகள் விமானங்களை வெறுக்க வைக்கும்.
உதாரணமாக Airbus 320 போன்ற ஒரு நடுத்தர single-aisle பயணிகள் விமானத்துக்கு 1.8 km முதல் 2.1 km ஓடுபாதை தேவை. பலாலியில் அவ்வகை ஓடுபாதை இல்லை. பலாலி ஓடுபாதையின் நீளம் 1.4 km என்றே கூறப்படுகிறது. இங்கே Twin-aisle விமான கதை ஒரு பகல் கனவு. Airbus 380 க்கு இடங்களுக்கும், காவும் பாரத்துக்கும் ஏற்ப 3.7 km நீள ஓடுபாதை வரை தேவை.
அத்துடன் உலகில் turboprop engine கொண்ட பெரிய அல்லது நடுத்தர அளவு பயணிகள் விமானங்கள் இல்லை. Turboprop engine பெரிய விசிறிகளை கொண்டு உள்ளதால் அந்த விமானங்களின் இறக்கைகள் விமானத்து மேலே இருக்கும். அப்படியானால் தான் இறக்கைகளில் பொருத்தப்படும் engine விசிறிகள் நிலத்தில் முட்டாது. பெரிய மற்றும் நடுத்தர அளவு பயணிகள் விமானங்களில் turbine engine உள்ளது. Turbine இயந்திரங்களுக்கு பெரிய விசிறிகள் இல்லை.
ATR 72 போன்ற தற்போது பலாலி வரும் சிறிய பயணிகள் விமானங்கள் turboprop engine களை கொண்டுள்ளதாலேயே அவற்றின் இறக்கைகள் விமானத்துக்கு மேலே உள்ளன.

அதனால் பலாலிக்கு தற்போதைக்கு நடுத்தர மற்றும் பெரிய பயணிகள் விமானங்களுக்கு சந்தர்ப்பம் இல்லை. அதற்கான பொருளாதார காரணமும் இல்லை.
