அமெரிக்க வள்ளத்தில் வந்தோரை கியூபா சுட்டு 4 பேர் பலி

அமெரிக்க வள்ளத்தில் வந்தோரை கியூபா சுட்டு 4 பேர் பலி

அமெரிக்காவின் பிளோரிடா (Florida) மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு FL7726SH என்ற பதிவு இலக்கத்தை கொண்ட 24 அடி நீள வள்ளத்தில் (speedboat) கியூபாவின் கடல் எல்லைக்குள் புதன்கிழமை நுழைந்தோரை நோக்கி கியூபாவின் எல்லை பாதுகாவல் படைகள் சுட்டதால் 4 பேர் பலியாகி உள்ளனர்.

பலியானோர் விபரம், இவர்களின் நோக்கம் ஆகியன இதுவரை அறிவிக்கப்படவில்லை. அமெரிக்காவும், கியூபாவும் தனித்தனியே தமது சொந்த விசாரணைகளை செய்கின்றன.

அந்த வள்ளத்தில் பயணித்த மேலும் 6 பேர் தமது காயங்களுக்கு கியூபாவில் வைத்தியம் பெற்று வருகின்றனர்.

கியூபாவின் Villa Clara மாநிலத்து Falcones Cay பகுதி கடலில் கியூபாவை அண்மித்த வள்ளத்தை விசாரிக்க சென்ற கியூபா பாதுகாவலர் மீது வள்ளத்தில் பயணித்தோர் முதலில் சுட்டு உள்ளனர். அப்போது கியூபாவின் பாதுகாவலர் செய்த சூட்டுக்கே மேற்படி 4 பேரும் பலியாகினர்.

கியூபா மீது தற்போது அமெரிக்க சனாதிபதி ரம்ப் பலத்த பொருளாதார தடைகளை திணித்து வருகிறார்.