அரசின் புதிய விதிகளால் 1,000 IndiGo விமான சேவைகள் நிறுத்தம்

அரசின் புதிய விதிகளால் 1,000 IndiGo விமான சேவைகள் நிறுத்தம்

இந்தியாவின் ÍndiGo விமான சேவை கடந்த சில தினங்களாக பலத்த நெருக்கடியில் உள்ளது. இது சுமார் 1,000 விமான சேவைகளை இடைநிறுத்தம் செய்ததால் இந்தியாவில் விமான சேவை பாரிய பாதிப்புக்கு உள்ளாகியது. அண்மையில் இந்திய அரசு நடைமுறை செய்யவிருந்த விமானிகளுக்கான புதிய விதிகளே IndiGo குழப்பத்துக்கு காரணம்.

விமான சேவை பாதுகாப்பை கருத்தில் கொண்ட இந்திய அரசு அண்மையில் விமானிகள் தொடர்பாக நடைமுறை செய்த விதிகள் சில வருமாறு:

1) விமானிகள் ஒவ்வொருவரும் கிழமை ஒன்றுக்கு குறைந்தது 48 மணித்தியால ஓய்வை கொண்டிருக்க வேண்டும். இது முன்னர் 36 மணித்தியாலங்களாக மட்டுமே இருந்தது.

2) விமானிகள் ஒவ்வொருவரும் கிழமைக்கு 2க்கு மேற்பட்ட இரவு நேர (12:00 am to 6:00 am) தரை இறங்களை (landing) உள்ளடக்கிய பயணங்களை கொண்டிருக்க முடியாது. தற்போது இத்தொகை 6 ஆக உள்ளது. இந்த விதியை நடைமுறை செய்வது தற்போது பெப்ரவரி 10ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

3) விமானிகள் எவரும் இரவு பறப்புடன் கூடிய பயணத்தை தொடர்ச்சியாக 10 மணித்தியாலங்களுக்கு மேல் செய்ய முடியாது. தற்போது இந்த சட்டமும் பெப்ருவரி 10ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

4) விமானிகள் விடுமுறையில் இருக்கும் நேரத்தை விதி 1) இல் கூறப்பட்ட ஓய்வு நேரத்தில் இணைக்க கூடாது. இந்த சட்டமும் தற்போது கைவிடப்பட்டு உள்ளது. திருமணம், பிறந்த தினம், மரணம் போன்ற நிகழ்வுகளுக்கு விடுமுறை எடுக்கும் விமானி போதிய ஓய்வு எடுத்திருப்பார் என்று கருத முடியாது.

மேற்படி விதிகள் பாதுகாப்புக்கு நல்லது என்றாலும், இந்திய அரசும், IndiGo விமான சேவையும் இவற்றை நடைமுறை செய்ய தகுந்த திட்டத்தை கொண்டிருக்கவில்லை. அதனாலேயே இந்தியாவில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் யாழ்பாணத்து பலாலிக்கான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

IndiGo சனிக்கிழமை மட்டும் 400 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது.

இந்த சூழ்நிலையை தமது நயத்துக்கு பயன்படுத்த விரும்பிய ஏனைய விமான சேவைகள் தமது ticket விலைகளை அதிகரித்தன. அதனால் இந்திய அரசு தற்காலிகமான விலை கட்டுப்பாடு ஒன்றையும் நடைமுறை செய்துள்ளது.