அரசியல் ஈடுபாட்டை குறைக்கிறார் இலான் மஸ்க் 

அரசியல் ஈடுபாட்டை குறைக்கிறார் இலான் மஸ்க் 

அமெரிக்க சனாதிபதி ரம்பின் பிரதான கையாக இயங்கும் இலான் மஸ்க் (Elon Musk) தனது அரசியல் பணிகளுக்கான கால அளவை மே மாதம் முதல் கிழமைக்கு 1 அல்லது 2 தினங்களாக குறைக்க முன்வந்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் Tesla கார் உற்பத்தி நிறுவனத்தின் காலாண்டு அறிவிப்பு ஒன்றிலேயே கூறியுள்ளார்.

இவரின் இந்த மன மாற்றத்துக்கு காரணம் மின்னில் இயங்கும் கார்களை தயாரிக்கும் Tesla நிறுவனம் பாரிய வீழ்ச்சியை அடைவதே. இலான் மஸ்கின் அரசியல் செயற்பாடுகள் அவர் மீது அமெரிக்காவிலும், உலகத்திலும் வெறுப்பை ஏற்படுத்த, அந்த வெறுப்பு Tesla கார்கள் மீதும் ஏற்பட்டுள்ளது.

Tesla நிறுவன பங்கு சந்தை பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தால் அதில் முதலீடு செய்தோர் இலானை CEO பதவியில் இருந்து விரட்டி விடுவார்கள் என்ற பயம் இலானை பற்றி இருக்கலாம். அத்துடன் ரம்ப் ஆட்சி ஆபத்தில் உள்ளது என்பதையும் இலான் அறிந்து அதிலிருந்து மெல்ல நழுவ முயற்சிக்கலாம்.

இந்த காலாண்டில் Tesla வின் மொத்த வருமானம் 9% ஆல் குறைந்து உள்ளது. கார் விற்பனை மூலமான வருமானம் 20% ஆல் குறைந்து உள்ளது. செலவுகளுக்கு பின்னரான வருமானம் 39% ஆல் குறைந்து உள்ளது.

ரம்ப் அரசில் DOGE (Department of Government Efficiency) என்ற கிளை மூலம் இலான் தனது அரசியலை செய்து வருகிறார். இவரின் பதவி காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல.

ஏற்கனவே சீனாவின் BYD கார் நிறுவனத்துடன் போட்டியிட முடியாது தவித்த Tesla பின் இலானின் அரசியல் செயற்பாடுகளால் மேலும் பின்னடைவை அடைந்துள்ளது.

Tesla பங்கு ஒன்றின் விலை அதன் அதி உயர் விலையில் இருந்து சுமார் 50% பெறுமதியை தற்போது இழந்துள்ளது. அதாவது அதி உயர் விலையில் இந்த பங்கில் முதலீடு செய்தோர் தற்போது அவர்களின் முதலீட்டின் 50% பெறுமதியை தற்போது இழந்துள்ளனர்.