ஆறு பூச்சியங்களை விலக்கும் Venezuela நாணயம்

ஆறு பூச்சியங்களை விலக்கும் Venezuela நாணயம்

அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடையுள் இருக்கும் Venezuela புதிய நாணயத்தை வெளியிடுகிறது. பழைய நாணயத்தில் இருந்து கடைசி 6 பூச்சியங்கள் விலக்கப்பட்டு புதிய நாணயம் உருவாக்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதார தடை காரணமாக அந்த நாட்டு நாணயத்தின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததே புதிய நாணய அறிமுகத்துக்கு காரணம்.

அங்கு தற்போது நடைமுறையில் உள்ள அதி கூடிய தொகை தாள் நாணயம் 1 மில்லியன் bolivar. ஆனால் அந்த 1 மில்லியன் bolivarருக்கான அமெரிக்க டாலர் பெறுமதி சுமார் $0.25 மட்டுமே.

முன்னைய 1 மில்லியன் (1,000,000) bolivar புதிய 1 bolivar ஆக அமையும்.

இவ்வாறு புதிய நாணயத்தை நடைமுறை செய்வது அந்த நாட்டு நாணய பெறுமதியை மாற்றாது. பதிலுக்கு சிறிய எண்களில் தொகைகளை கூற வசதி செய்யும்.

தற்போது கைவிடப்படும் நாணயம் 2018ம் ஆண்டே நடைமுறை செய்யப்பட்டு இருந்தது. அப்போதும் 5 பூச்சியங்கள் விலக்கப்பட்டு இருந்தன. அதற்கு முன் 2008ம் ஆண்டிலும் 3 பூச்சியங்கள் விலக்கப்பட்டு இருந்தன.

2013ம் ஆண்டில் இருந்து இதுவரை அந்த நாட்டின் GDP சுமார் 80% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2019ம் ஆண்டு அந்நாட்டின் பணவீக்கம் 300,000% ஆக இருந்தது. தற்போது 2,146% ஆக குறைந்து உள்ளது.