இந்திய பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படிக்க மாணவர்களை தெரிவு செய்ய மத்திய அரசால் செய்யப்படும் NEET (National Eligibility and Entrance Test) சோதனை கேள்விகள் இந்த ஆண்டும் கசிந்தால் மீண்டும் கிளர்ச்சிகள் தோன்றியுள்ளன.
சுமார் 100,000 மருத்துவ இடங்களை கைப்பற்ற இந்த ஆண்டு சுமார் 2.4 மில்லியன் மாணவர்கள் NEET சோதனையில் பங்கு எடுத்துள்ளனர். இந்த சோதனை 180 MCQ வகை கேள்விகளைகொண்டது. சரியான ஒவ்வொரு விடைக்கு 4 புள்ளிகளும், தவறான விடைக்கு -1 புள்ளியும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720/720 புள்ளிகளை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 2 மாணவர்கள் மட்டுமே 720/720 புள்ளிகளை பெற்று இருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிடைத்த அதிக புள்ளி 715/720 மட்டுமே. இந்த ஆண்டு 215 மாணவர்கள் 715 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
2023ம் ஆண்டு 700 புள்ளிகளுக்கும் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர் தொகை 304 மட்டுமே. இந்த ஆண்டு 2,100 மாணவர் 700 க்கும் அதிக புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இம்முறை இரண்டு மாணவர்கள் 719 மற்றும் 718 புள்ளிகளை பெற்று உள்ளனர். அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்த மாணவர் 720 புள்ளிகளை பெறலாம். ஒரு கேள்விக்கு விடை அளிக்காத மாணவர் 716 புள்ளிகள் பெறுவர். ஒரு கேள்விக்கு தவறான விடை அளித்த மாணவர் 715 புள்ளிகள் பெறுவர் (720-4-1).
அப்படியானால் எப்படி இரண்டு மாணவர் 718 மற்றும் 719 புள்ளிகளை பெறலாம்? இந்த இரண்டு மாணவர்களுக்கும் மேலதிக புள்ளி வழங்கப்பட்டதாம்.
பீகார் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் தான் $36,000 வழங்கி கேள்விகளை பெற்றதாக கூறியுள்ளார்.
குயாரத் மாநிலத்து சோதனை நிலையம் ஒன்றில் 30 மாணவர்கள் வழமைக்கு மாறாக தொலை தூரங்களில் இருந்து வந்து சோதனையில் பங்கெடுத்து உள்ளனர். இவர்கள் $12,000 முதல் $50,000 வரை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம் அரச மானியத்தில் ஆய்வுகள் செய்ய மாணவர்களை தெரிவு செய்ய நிகழ்த்தப்படும் NET (National Eligibility Test) சோதனை கேள்விகளும் கசிந்தால் அதுவும் சர்சையில் உள்ளது.
