இரண்டாம் தினமும் பலஸ்தீனர், இஸ்ரேல் மோதல்

இரண்டாம் தினமும் பலஸ்தீனர், இஸ்ரேல் மோதல்

ஜெருசலேம் (Jerusalem) பகுதியில் பலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இரண்டு தினங்களாக மோதல்கள் தொடர்கின்றன. வெள்ளி, சனி ஆகிய இரண்டு தினங்களாக இடம்பெறும் இந்த மோதல்களுக்கு இதுவரை சுமார் 300 பேர் காயமடைந்து உள்ளனர்.

இன்று சனிக்கிழமை சுமார் 90 பேரும், வெள்ளிக்கிழமை சுமார் 210 பேரும் காயமடைந்து உள்ளனர். ஏறக்குறைய காயமடைந்தோர் அனைவரும் பலஸ்தீனர்களே. சில இஸ்ரேலிய போலீசாரும் காயமடைந்து உள்ளனர்.

இஸ்ரேல் மேலும் பலஸ்தீனர் இடங்களை யூத குடியிருப்புகளுக்கு பறிக்கும் நோக்கில் சில பலஸ்தீனர் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற உள்ளதாலேயே மோதல்கள் ஆரம்பித்தன. இந்த விசயம் காரணமாக புதன்கிழமை இரவு சில யூதர்களுக்கும், பலஸ்தீனர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இஸ்ரேல் நீதிமன்றம் திங்கள் பலஸ்தீனர் குடும்பங்களின் வெளியேற்றம் தொடர்பான வழக்கை எடுத்துக்கொள்ள உள்ளது. இஸ்ரேல் நீதிமன்றின் தீர்ப்புகள் பொதுவாக இஸ்ரேல் சார்பாகவே இருந்து வந்துள்ளன.