ஈராக்கையும் நீங்குகிறது அமெரிக்க படைகள்

அமெரிக்க படைகள் ஈராக்கையும் விட்டு வெளியேறவுள்ளது என்று அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று திங்கள் கூறியுள்ளார். ஈராக்கின் பிரதமரை இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்த பைடென் மேற்படி அறிவிப்பை செய்துள்ளார். தற்போது அங்கு சுமார் 2,500 அமெரிக்க படையினர் மட்டுமே உள்ளனர். ஒருகாலத்தில் அங்கு சுமார் 160,000 அமெரிக்க படையினர் போராடினர்.

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் அணு ஆயுதம் வைத்துள்ளார் என்ற பொய் குற்றச்சாட்டின் அடிப்படியில் சதாமை விரட்ட ஈராக் சென்ற அமெரிக்க படைகள் தற்போது பெரு நட்டத்தில் அங்கிருந்து வெளியேறுகிறது.

நியூ யார்க் நகரில் அல்கைடா நிகழ்த்திய செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் சதாமுக்கும் இடையில் தொடர்பு எதுவும் இன்றிய நிலையில், பொய் காரணங்களை முன்வைத்து மகன் புஷ் 2003ம் ஆண்டு சதாம் மீது போர் தொடுத்திருந்தார்.

யுத்தம் ஆரம்பிக்க ஒரு கிழமைக்கு முன் அமெரிக்க உதவி சனாதிபதி Dick Cheney தனது உரை ஒன்றில் ஈராக் யுத்தத்துக்கு $100 பில்லியன் மட்டுமே செலவாகும் என்று கூறியிருந்தார். ஆனால் அமெரிக்கா இதுவரை சுமார் $2 டிரில்லியன் ($2,000 பில்லியன்) செலவழித்து உள்ளது. அத்துடன் யுத்தம் ஆகக்கூடியது 5 மாதங்களே நீடிக்கும் என்று பாதுகாப்பு செயலாளர் Donald Rumsfeld கூறி இருந்தாலும், யுத்தம் 18 ஆண்டுகள் நீடித்து உள்ளது.

அமெரிக்கா குறைந்தது 4,424 படையினரை ஈராக்கில் இழந்தும் உள்ளது. மரணித்த ஈராக்கியர் தொகை திடமாக அறியப்படாவிடினும், அத்தொகை சுமார் 150,000 முதல் 200,000 வரை இருக்கும் என்று பல்வேறு கணிப்புகள் கூறுகின்றன.