உயர் வருமான வரி குறைப்பை கைவிட்டார் டிரஸ்

உயர் வருமான வரி குறைப்பை கைவிட்டார் டிரஸ்

அண்மையில் பிரித்தானிய பிரதமராக பதவியை கைக்கொண்ட லிஸ் டிரஸ் தனது முதலாவது வரவு செலவு திட்டத்தில் கொண்டிருந்த பிரதான அங்கம் ஒன்றை எதிர்ப்புகள் காரணமாக திங்கள் கைவிட்டார். உயர் வருமானம் கொண்டோருக்கு வழங்க இருந்த வருமான வரி குறைப்பையே டிரஸ் அரசு கைவிட்டு உள்ளது.

ஆண்டு ஒன்றுக்கு 150,000 பவுண்ட் ($167,000) அல்லது அதற்கு மேல் உழைப்பவர்கள் செலுத்திவந்த 45% வரியை குறைக்கவே டிரஸ் அரசு தனது வரவு செலவு திட்டத்தில் அறிவித்து இருந்தது. இந்த வரி குறைப்பு அரசுக்கு கிடைக்கும் வரி வருமானத்தை வெகுவாக குறைக்க இருந்தது. அதையே பலரும் வெறுத்தனர்.

கடந்த 10 நாட்களாக மேற்படி வரி குறைப்பை ஆதரித்து பேசி வந்தாலும் இறுதியில் டிரஸ் அரசு அந்த முயற்சியை கைவிட்டு உள்ளது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பிரதமரின் ஆளும் கட்சி உறுப்பினர் பலரும் எதிர்த்து இருந்தனர்.

வருமான வரி மூலமான வருமானத்தை சுமார் 45 பில்லியனால் குறைத்து, அதேவேளை அரசின் புதிய திட்டங்களை கடன் பெற்று நடைமுறை செய்வதை பலரும் சாடியுள்ளனர். அதனாலேயே பவுண்ட் தனது பெறுமதியை மேலும் இழந்தது.

உயர் வருமானம் கொண்டோரின் வருமான வரி குறைத்தலை இடைநிறுத்தியபின் பிரித்தானிய பவுண்ட் பெறுமதி சிறிதளவு அதிகரித்து உள்ளது. தற்போது ஒரு பவுண்ட் $1.12 ஆக உள்ளது.