படையினர் குதிரை ஏறி, யானை ஏறி கைகளில் வாள் ஏந்தி யுத்தம் செய்த காலம் மலையேறி தற்போது எல்லோரும் தமது தரப்பில் இரத்தம் சிந்தாது தொழிநுட்பங்களை ஏவி யுத்த வெற்றிகளை அடைய விரும்புகின்றனர்.
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டும் இவ்வகை யுத்தம் ஒன்றையே ஈரான் மீது ஏவியுள்ளது. ஆனால் இந்த யுத்தத்தை ஆரம்பித்த அமெரிக்க-இஸ்ரேல் கூட்டும், இந்த கூட்டுக்கு தமது நாடுகளில் தளங்களை அமைக்க வசதி வழங்கிய மத்திய கிழக்கு நாடுகளும் எவ்வளவு காலத்துக்கு இந்த யுத்தத்தை தொடரலாம் என்பது சந்தேகமே.
உதாரணமாக ஈரான் தயாரித்து ஏவும் Shahed-136 என்ற drone ஒன்றின் பெறுமதி சுமார் $20,000 மட்டுமே. அத்துடன் இதை வேகமாக தயாரிக்கவும் முடியும்.
இவ்வகை drone ஒன்றை ஈரான் ஏவும்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்கா வழங்கிய Patriot என்ற தடுப்பு ஏவுகணையை ஏவி தம்மை தாக்க வரும் ஈரானின் drone ஐ வானத்தில் வைத்து அழித்து விடுகின்றனர். ஆனாலும் Patriot ஏவுகணை ஒரு மலிந்த விலை பொருளல்ல.
Patriot (PAC-3 MSE) தடுப்பு ஏவுகணை ஒன்று சுமார் $4 மில்லியன் ($4,000,000) பெறுமதியானது. அப்படியானால் எவ்வளவு காலம் $4 மில்லியன் தடுப்பு ஏவுகணை மூலம் $0.02 மில்லியன் பெறுமதியான drone ஐ தடுக்கலாம்?
இந்த நாடுகளின் கைகளில் எத்தனை Patriot தடுப்பு ஏவுகணைகள் உள்ளன? அமெரிக்க செனட்டர் Mark Kelly இன்று “we do not have an unlimited supply” என்று கூறியுள்ளார்.
2024ம் ஆண்டில் மொத்தம் 500 Patriot ஏவுகணைகளையும், 2025ம் ஆண்டில் 600 Patriot ஏவுகணைகளையும் மட்டுமே அமெரிக்கா (Lockheed Martin) தயாரித்து இருந்தது.
யூக்கிறேன் யுத்தத்திலும் இந்நிலை தோன்றி உள்ளது.
மேலும் பலமான அமெரிக்காவின் THAAD தடுப்பு ஏவுகணை ஒன்றின் விலை சுமார் $12 மில்லியன்.
