ஐ. நா. தீர்மானத்தால் அமெரிக்காவுடன் இஸ்ரேல் முறுகல்

ஐ. நா. தீர்மானத்தால் அமெரிக்காவுடன் இஸ்ரேல் முறுகல்

நேற்று ஐ. நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க பைடென் அரசு அமெரிக்காவின் வீட்டோ (veto) வாக்கை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேறாது தடுக்கவில்லை என்பதால் இஸ்ரேல் அமெரிக்காவுடன் முரண்பட ஆரம்பித்துள்ளது.

நேற்றைய ஐ. நா. தீர்மானம் இஸ்ரேல் உடனே காசா யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளது. அமெரிக்கா இந்த தீர்மானத்தை அதன் வீட்டோ வாக்கு மூலம் தடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா இந்த தீர்மானத்தை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை, பதிலுக்கு வாக்களியாது இருந்துள்ளது.

இதனால் விசனம் கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு அமெரிக்கா செல்லவிருந்த இஸ்ரேல் குழுவை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த குழு பைடென் குழுவுக்கு 1.5 மில்லியன் அகதிகள் செறிந்து உள்ள Rafah நகரில் எவ்வாறு யுத்தத்தை தொடர்வது என்று விளக்க இருந்தது.

இதுவரை ஐ.நா. வில் இஸ்ரேலின் விருப்பத்துக்கு ஏற்ப வாக்களித்த அமெரிக்கா இம்முறை அவ்வாறு செய்யாதது இஸ்ரேலின் குணத்தில் அமெரிக்கா விசனம் கொண்டுள்ளமையை காட்டுகிறது.