காசாவில் பலியாகும் இஸ்ரேல் இராணுவத்தின் தொகை மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 22 மாதங்களாக காசாவில் இடம்பெறும் யுத்தத்துக்கு இதுவரை குறைந்தது 888 இஸ்ரேல் படையினர் பலியாகி உள்ளனர். அத்துடன் பெரும் தொகை இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்தும் உள்ளனர்.
இஸ்ரேல் வானத்தில் இருந்து குண்டுகளை பொழிந்தாலும், நிலத்தில் ஹமாஸ் எதிர்பாராத அளவு தாக்குதல்களை செய்து வருகிறது.
இஸ்ரேல்-ஈரான் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தினத்தன்று இஸ்ரேல் கவச வாகனம் மீது ஹமாஸ் செய்த தாக்குதலுக்கு அதில் இருந்த 7 இஸ்ரேல் படையினரும் பலியாகினர்.
கடந்த திங்கள் Beit Hanoun என்ற இடத்தில் பயணித்த இஸ்ரேல் இராணுவம் மீது ஹமாஸ் தொலைவில் இருந்து இயக்கிய குண்டு மூலம் தாக்கியது. அவ்விடத்துக்கு மேலும் இஸ்ரேல் படையினர் விரைந்த போது இரண்டாம் குண்டும் வெடித்தது. சிறிது நேரத்தில் மூன்றாம் குண்டும் வெடித்தது. இந்த தாக்குதலுக்கு 5 இஸ்ரேல் படையினர் பலியாகியும், 14 படையினர் காயமடைந்தும் உள்ளனர்.
புதன்கிழமை இஸ்ரேல் இராணுவ பொறியியலாளர் வாகனம் ஒன்றின் மீது ஹமாஸ் செய்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவ சாரதி பலியாகி இருந்தார்.