சீனாவில் அவசரமாக உளவுக்கு ஆள் தேடும் அமெரிக்கா

சீனாவில் அவசரமாக உளவுக்கு ஆள் தேடும் அமெரிக்கா

கடந்த சில தினங்களாக அமெரிக்காவின் CIA என்ற உளவு அமைப்பு சீனாவில் அமெரிக்க நன்மைக்கு உளவு வேலை செய்ய சீனர்களை தேட ஆரம்பித்துள்ளது. இந்த முயற்சியின் ஒரு அங்கமாக குறைந்தது இரண்டு சீன மொழியிலான வீடியோக்கள் சீனாவில் கசிய விடப்பட்டுள்ளன.

இந்த இரண்டு வீடியோக்களும் சீனாவில் ஊழல் செய்து கைதுக்கு பயப்படும் அல்லது வறுமையில் துன்புறும் சீனர்களை குறிவைத்துள்ளன. இந்த இரண்டு வீடியோக்களும் அமெரிக்கா சார்பில் உளவு செய்ய விரும்புவோர் எவ்வாறு CIA உடன் இணையம் மூலம் தொடர்பு கொள்வது என்றும் கூறியுள்ளன.

1951ம் ஆண்டில் சீன படைகள் கொரிய யுத்தத்தில் நுழைவதை தடுக்க CIA பல முயற்சிகளை எடுத்து. சீனாவில் ஒற்றர்களை தேடும் முயற்சியில் தோல்வி அடைந்தது. பின் Third Force என்ற ஒற்றர்களை விமானம் மூலம் சீனாவுள் வீச ஆரம்பித்தது. முதலில் வீசப்பட்ட (1952ம் ஆண்டு ஏப்ரல் மாதம்) 4 ஒற்றர்கள் வீசப்பட்ட பின் காணாமல் போயிருந்தனர்.

தொடர்ச்சியாக CIA மொத்தம் 212 பேரை விமானம் மூலம் வீசியது, அதில் 101 பேர் மாஓ படைகளால் கொலை செய்யப்படும், 111 பேர் கைது செய்யப்பட்டும் இருந்தனர். சில விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. CIA உறுப்பினரான Jack Downey, Dick Fecteau ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த முயற்சியும் முற்றாக விரயம் ஆனது.

1959ம் ஆண்டும் அமெரிக்க உளவு விமானங்கள் சீனா மீது பறந்தன. அவற்றில் சில சீனாவால் சுட்டு வீழ்த்தப்பட்டன. அமெரிக்காவின் அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

2001ம் ஆண்டு அமெரிக்கா சீன சனாதிபதி Jiang Zemin க்கு தயாரித்த விமானத்தில் குறைந்தது 20 செய்மதி மூலம் உளவு பார்க்கும் பொருட்கள் (listening devices) இருந்ததை சீன அறிந்து அந்த விமானத்தை கைவிட்டு இருந்தது.

2012ம் ஆண்டில் The New York Times செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றின்படி 2010 முதல் 2012 வரையான காலத்தில் சீனா குறைந்தது 20 அமெரிக்க உளவாளிகளை கொலை செய்து அல்லது சிறையில் அடைத்து அமெரிக்க உளவு படையை அழித்திருந்தது.

மேற்படி தோல்வியை ஆராய்ந்த அமெரிக்காவின் CIA யும், FBI யும் மூன்று காரணங்களை முன்வைத்தன: 1) CIA யுள் சீனா ஊடுவி இருக்கலாம், 2) சீன உளவாளிகள் மடமை தனமாக செயற்பட்டு இருக்கலாம், 3) CIA யின் தொலைத்தொடர்பை சீனா ஊடுருவி இருக்கலாம்.

அமெரிக்காவின் Edward Snowden உம் அமெரிக்காவின் சீனா மீதான உளவு வேலைகள் தொடர்பான செய்திகளை வெளியிட்டு இருந்தார்.

2021ம் ஆண்டு The New York Times வெளியிட்ட செய்தி ஒன்று CIA பெருமளவு சீன உளவாளிகளை இழந்து உள்ளது என்ற இரகசிய செய்தி ஒன்றையும் பகிரங்கம் செய்திருந்தது.