வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய விமான சேவை நிறுவனங்கள் சேவைகளை வழங்குவதற்கு பெரிய இடராக இருப்பது இந்தியாவின் பூகோள இருப்பிடம். பாகிஸ்தான் மீது அல்லது சீனா மீது பறந்தால் மட்டுமே இந்திய விமானங்கள் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை விரைவாக, குறைந்த செலவில் அடையலாம். ஆனால் பாகிஸ்தான், சீனா இரண்டுமே இந்தியாவுக்கு நட்பு நாடுகள் அல்ல.
இதுவரை Air India போன்ற இந்திய விமான சேவைகள் பாகிஸ்தான் மேலாக பறந்தே வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை அடைந்தன. ஆனால் அண்மையில் இந்தியாவும் பாக்கிஸ்தானும் முரண்படுவதால் பாகிஸ்தான் வான்பரப்பு இந்தியாவுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அதனாலேயே Air India விமானங்கள் இந்தியாவின் வடக்கே உள்ள சீன வான்பரப்பின் ஊடு செல்ல அனுமதியை பெறுமாறு விமான சேவை இந்திய அரசை கேட்டுள்ளது. அவ்வாறு சீனா அனுமதித்தால் இந்த விமானங்கள் பின் ரஷ்யா மேலால் பறந்து தூர இடங்களை விரைவில் அடைய முடியும். ரஷ்யா ஒரு இந்திய நட்பு நாடு.
தற்போது Air India விமானங்கள் பாகிஸ்தான் மற்றும் சீன வான்பரப்புகளை தவிர்த்து, மேற்கே மத்திய கிழக்கை நோக்கி பறந்து பின் வடக்கே செல்வதால் Air India விமானங்களுக்கு 3 மணித்தியாலங்கள் அதிகமாக தேவைப்படுகிறது. அதனால் விமானங்களின் எரிபொருள் செலவு மட்டும் 29% ஆல் அதிகரித்துள்ளது. விமானிகள், பணியாளர் ஊதியமும் 3 மணித்தியாலத்தில் அதிகரித்துள்ளது. பாக்கிஸ்தான் வான் பரப்பு மூடல்கடந்த ஆண்டு Air India வுக்கு சுமார் $455 மில்லியன் மேலதிக செலவை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் மேலால் பறக்க அனுமதி கிடைத்தால் அவரசகாலத்தில் விமானங்கள் அவ்வழியியே உள்ள Hotan, Kashgar, Urumqi போன்ற விமான நிலையங்களில் இறங்கவும் அனுமதியை கொண்டிருக்கவேண்டும்.
ரஷ்யாவுக்கு மேலால் பறக்க முடியாது என்பதால் ஏற்கனவே அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் விமானங்கள் இந்தியா செல்வதை நிறுத்தி உள்ளன.
