செவ்வாயில் நாசாவின் Perseverance கலம்

செவ்வாயில் நாசாவின் Perseverance கலம்

அமெரிக்காவின் நாசா (NASA) செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய Perseverance என்ற கலம் (robot) அங்கு பாதுகாப்பாக தரையிறங்கி தற்போது புதிய படங்களையும், தரவுகளையும் அனுப்புகிறது. நேற்று வியாழன் செவ்வாயில் இறங்கிய அந்த கலம் மூலம் செவ்வாயின் கல், மண் மாதிரிகளை (samples) பூமிக்கு எடுக்கவும் நாசா முனைகிறது.

இந்த கலம் சுமார் 1.2 km நீளமும், 1.2 km அகலமும் கொண்ட பகுதியை வலம்வந்து ஆராயும். இதை தரை இறக்கிய பகுதியில் 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆற்று பகுதி இருந்ததாக நாசா கருதுகிறது. அதனாலேயே அப்பகுதி இறங்குமிடமாக தெரிவு செய்யப்பட்டது.

செவ்வாயின் தரையில் இருந்து 700 km உயரத்தில் செய்மதி ஒன்று 3 km/sec வேகத்தில் வலம் வருகிறது. அதன் மூலம் தரவுகள் பூமிக்கு கடத்தப்படும்.

இந்த முயற்சிக்கு $2.8 பில்லியன் செலவாகி இருந்தது. இது நாசா செவ்வாய்க்கு அனுப்பிய 5 வது கலம் ஆகும். இந்த முயற்சியில் சுமார் 450 விஞ்ஞானிகள் பங்கு கொண்டிருந்தனர்.

இந்த கலம் அமெரிக்காவில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் திகதி, சுமார் 7 மாதங்களின் முன், ஏவப்பட்டு இருந்தது. சுமார் 482 மில்லியன் km பயணத்தின் பின் செவ்வாயை அடைந்துள்ளது இந்த கலம்.