செவ்வாயில் பறந்தது நாசாவின் சிறிய ஹெலி

செவ்வாயில் பறந்தது நாசாவின் சிறிய ஹெலி

நாசாவின் (NASA) சிறிய ஹெலி ஒன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்து உள்ளது. இந்த ஹெலி 3 மீட்டர் உயரம் மட்டுமே எழுந்தாலும், 40 செக்கன்கள் மட்டுமே பறந்தாலும் இதுவே மனிதனின் ஹெலி ஒன்று இன்னோர் கிரகத்தில் பறப்பது முதல் தடவை. இந்த பறப்பு நியூ யார்க் நேரப்படி இன்று திங்கள் அதிகாலை 3:34 மணியளவில் இடம்பெற்று உள்ளது.

Ingenuity என்ற இந்த ஹெலி Perseverance என்ற நாசாவின் செவ்வாய் சென்ற கலத்துள் (rover) அனுப்பப்பட்டு இருந்தது. இந்த ஹெலி அடுத்துவரும் கிழமைகளில் மேலும் குறைந்தது 4 தடவைகள் பறக்க முனையும் என்கிறது நாசா. இது அடுத்த முறை 5 மீட்டர் உயரம் சென்று, 15 மீட்டர் தூரம் பயணிக்கலாம்.

Ingenuity பறக்கும்பொழுது அதை காவிச்சென்ற Perseverance கலம் 65 மீட்டர் தூரத்தில் இருந்து அவதானித்து. அத்துடன் பறக்கும் ஹெலியை படமும் பிடித்தது. ஹெலியில் உள்ள புகைப்பட கருவியும் படங்களை பிடித்து உள்ளது. இந்த ஹெலியின் எடை சுமார் 1.8 kg. இதை தயாரிக்க $80 மில்லியனும், செயற்படுத்த $5 மில்லியனும் செலவாகி உள்ளன.

செவ்வாயில் பறப்பது இலகுவல்ல. செவ்வாய் நிலத்தை நோக்கிய ஈர்ப்பு சக்தி மிக குறைவு என்றாலும், இங்கே அமுக்கமும் மிக குறைவு. பூமியுடன் ஒப்பிடுகையில் செவ்வாயின் நிலமட்ட அமுக்கம் 1% மட்டுமே.

படம்: NASA