ஜப்பான் மேலால் வடகொரிய ஏவுகணை, ஜப்பான் குமுறல்

ஜப்பான் மேலால் வடகொரிய ஏவுகணை, ஜப்பான் குமுறல்

இன்று செவ்வாய் வடகொரியா தனது ஏவுகணை ஒன்றை ஜப்பானுக்கு மேலால் ஏவி உள்ளது. இதனால் ஜப்பானும், அமெரிக்காவும் கடுமையாக கோபம் கொண்டுள்ளன. ஜப்பானின் பிரதமர் இச்செயலை வன்முறை குணம் (violent behavior) என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேற்படி ஏவுகணை காரணமாக சில இடங்களில் ஜப்பானியர்களை பாதுகாப்பு தேடுமாறு ஜப்பானிய அரசு கூறியிருந்தது. East Japan Railway சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன.

ஜப்பானின் கணிப்பின்படி இந்த ஏவுகணை ஜப்பானுக்கு கிழக்கே சுமார் 4,600 km தூரத்தில் பசிபிக் கடலுள் விழுந்து உள்ளது. இது சுமார் 1,000 km உயரத்துக்கு சென்றது என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்மதிகளுக்கு மேலாக சென்று தாக்கினால், எதிரிகளின் செய்மதிகள் இவற்றை கவனித்து தமது ஏவுகணைகளால் தாக்கி அழிப்பது கடினம்.

இவ்வகை ஏவுகணைகள் வளிமண்டலத்துக்கும் மேலால் செல்வதால் தற்கால சர்வதேச சட்டம் ஒன்றும் இதை தடுக்கவில்லை. ஸ்புட்னிக் என்ற சோவியத் செய்மதி அமெரிக்கா மேலால் சென்றது முதல் இன்று வரை வளிமண்டலத்துக்கு மேலால் செல்லும் செய்மதி, கலம், கணை ஆகியவற்றுக்கு சட்டம் இல்லை.

வடகொரியாவின் Hwasong-17 என்ற ஏவுகணை 15,000 km தூரம் சென்று தாக்க வல்லது என கூறப்படுகிறது.

அமெரிக்காவும், தென்கொரியாவும் யுத்த பயிற்சிகள் செய்ய தயார் செய்யும் வேளையிலேயே வடகொரியா இந்த ஏவுகணையை எய்துள்ளது.

கடந்த ஒரு கிழமைக்குள் வடகொரியா ஏவிய 5ஆவது ஏவுகணை இது. கடந்த சனிக்கிழமை மட்டும் 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருந்தது.

இதற்கு முன் 2017ம் ஆண்டும் வடகொரியா ஜப்பானுக்கு மேலால் ஏவுகணை ஒன்றை செலுத்தி இருந்தது.